மணிப்பூர் கலவரம் நாட்டையே உலுக்கிய நிலையில் ஹரியானாவிலும் கலவரங்கள் சமீப நாட்களில் தலை தூக்க ஆரம்பித்துள்ளன. நூஹ் மாவட்டத்தில் ஜூலை 31 அன்று விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் நடத்திய பிரஜ் மண்டல் யாத்ரா ஊர்வலம் கலவரமாக மாறியது. இதில் இமாம், 2 ஊர்க்காவல் படையினர், பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் என இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
நூஹ் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை அடுத்தடுத்த நாட்களில் அருகில் இருந்த மாவட்டங்களுக்கும் பரவிய நிலையில், ஹரியானா மாநிலத்தில் மகேந்திரகர், ஜஜ்ஜார், ரேவாரி என 3 மாவட்டங்களில் உள்ள 14 கிராம பஞ்சாயத்துகள் (மகா பஞ்சாயத்துக்கள் - அரசு சார்ந்தது அல்ல), காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளன. அதில், தாங்கள் முஸ்லீம் சமூக உறுப்பினர்களை புறக்கணிக்க இருப்பதாக தெரிவித்துள்ளன. இஸ்லாமிய சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு வீடுகள் மற்றும் கடைகளை வாடகைக்கு விடக்கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். மேலும் வியாபாரம் செய்ய வருபவர்களையும் அடையாள அட்டைகளை ஆய்வு செய்த பின்பே அனுமதிக்கின்றனர்.
குறிப்பிட்ட சில சமூகங்களுக்கு எதிராக கடந்த சில முறைகளும் இது போல் நடந்துள்ளது. சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அவர்களை புறக்கணிக்கும் போது புறக்கணிப்படும் மக்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு பாதிக்கப்படுவர்.
இது குறித்து குருகிராம் கவுன்சிலர் கூறுகையில், “அவர்களுக்கு வாடகைக்கு வீடு கடைகள் எதுவும் தரக்கூடாது. மாவட்டத்தில் ‘வால்மீகி மக்கள்’ இறைச்சிக் கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும். மேலும் அவர்கள் நடத்தும் அனைத்து கடைகளையும் புறக்கணிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
குருகிராமில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர். இது குறித்து பஜ்ரங்தள் உறுப்பினர் குல்பூஷன் பரத்வாஞ் கூறுகையில், இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு வகைகளில் நாங்கள் ஆதரவளித்து வந்ததாகவும் இனி அவர்களுக்கு ஆதரவளிக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இம்முடிவில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.