ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மாவட்டத்தில் கோவில் நிகழ்ச்சியின்போது மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்துக்குட்பட்ட ஜசோல் கிராமத்தில் உள்ள பள்ளியில் இன்று கோவில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்காக இரும்பு கம்பிகளை கொண்ட மிகப்பெரிய பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாலை 5 மணியளவில் பந்தலின் ஒருபகுதி திடீரென்று சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதையடுத்து இரும்பு உத்திரங்களும் கீழே சாய்ந்தன. இதைப்பார்த்த மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் பலர் இரும்பு உத்திரங்கள் மேலே விழுந்ததில் படுகாயமடைந்தார். இருப்பினும், 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இடியுடன் கூடிய மழையின் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் காரணமாக மின்சாரம் தாக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த 50-க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறுகையில், “ இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்காகவும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த விபத்து துருதிஷ்டவசமானது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்தனை செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.