கொரனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனாவிலிருந்து, இந்தியர்களை நாடு அழைத்து வருவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தியா அழைத்து வரப்படுவோர் 14 நாட்கள் தனியாக மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் வுஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஹூபே மாகாணத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு, தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது. வுஹான் பகுதியிலிருந்து இந்தியா திரும்ப காத்திருப்போர் மத்திய அரசை தொடர்பு கொள்ளும் வகையில், ஹெல்ப்-லைன்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே சீனாவிலிருந்து இந்தியா அழைத்து வரப்படுவோர், 14 நாட்கள் தனியாக மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் சிக்கித் தவிக்கும் புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த ஸ்ரீபனை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக, அவரது குடும்பத்தாரிடம் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்காக சீனா சென்ற ஸ்ரீபன், கொரனா பரவி வரும் வுஹான் நகரில் சிக்கியிருக்கிறார். ஸ்ரீபனை மீட்க வேண்டுமெனத் தொடர்ந்து புதியதலைமுறை செய்தி வெளியிட்ட நிலையில், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.