கேரள மாநிலம் வயநாட்டில் அடுத்தடுத்து நடந்த நிலச்சரிவில் 133 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப் பணிகள் இரவிலும் தொடர்ந்தன.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்த தொடர் கனமழையால் சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பலர் சிக்கிக்கொண்டனர். கணிக்கப்பட்ட அளவை விட கூடுதல் மழை பெய்த நிலையில், வீடுகள், ரிசார்ட்டுகள் நிறைந்த சுற்றுலா பகுதியை, தண்ணீர் அடித்துச் சென்றுள்ளது.
மேப்பாடி மலையின் மேல்பகுதியில் இருந்து உருண்ட வெள்ளம், அடுத்து இருந்த அத்தனை பகுதிகளையும் வாரிச்சுருட்டி வீசியுள்ளது. திங்கள் கிழமை இரவு 2 மணிக்கு தொடங்கிய வெள்ளத்தின் வேகத்தில், பல வீடுகள் மிதந்திருக்கின்றன. முண்டக்கை பகுதியில் இருந்த குட்டி நகரம், தற்போது இல்லை மாயமாகி உள்ளது. ராணுவம், மத்திய, மாநில பேரிடர் மீட்புக்குழு, லயன்ஸ் கிளப், தனி நபராக வந்து கைகோர்த்த தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள்தான், வீடுகள், குடியிருப்புகள், கட்டங்கள் ஆகியவை தற்போது இல்லை என்கின்றனர். புதிய திட்டத்துடன் மீட்புப் பணியை தொடங்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.மேப்பாடி முதல் சூரல்மலை வரையான 13 கி.மீ. முழுவதும் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில், கூடுதலாக தேவை என்றாலும் அனுப்பி வைக்கப்படும் என தனது எக்ஸ் பதிவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து கூறியுள்ள அவர், “திருவனந்தபுரம், பெங்களூரு, டெல்லி ஆகிய பகுதிகளில் இருந்து மீட்புக் குழு விரைந்திருக்கிறார்கள். ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவிவேதியிடம் பேசியுள்ளேன். ரப்பர் படகு, பாதுகாப்பு உடை, டீசல் என்ஜின்கள், மழைக் கோட்டுகள் ஆகியவற்றை அனுப்பியுள்ளதாக கூறியுள்ள கடலோர காவல் படை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, 690 அடி நீளமுள்ள பெய்லி பாலத்தை அந்தப் பகுதிக்கு கொண்டு செல்ல இருக்கிறது. ஏற்கனவே சாலை மார்க்கமாக 330 அடி நீளப் பாலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும், ஆயிரம்
பேரை இதுவரை ராணுவத்தினர் மீட்டுள்ளனர்.” என்று கூறியுள்ளார்.
மலை முகட்டில் மோதும் பனி, பசுமை தடவிய மலைச் சரிவு என மனதை கொள்ளை கொண்ட கடவுளின் தேசத்தில், மரண ஓலம் கேட்கிறது இன்று. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட உடல்களை மீட்டுள்ள நிலையில், ஏராளமானோர் மாயமாகி இருப்பதும், மண்ணில் புதைந்திருப்பதும் வார்த்தைகளில் விவரிக்க முடியாத வலியாக உள்ளது.