''13 வருடங்கள் கண்களில் தூக்கமில்லை" - மகனின் நீதிக்காகப் போராடிய தாய்..!

''13 வருடங்கள் கண்களில் தூக்கமில்லை" - மகனின் நீதிக்காகப் போராடிய தாய்..!
''13 வருடங்கள் கண்களில் தூக்கமில்லை" - மகனின் நீதிக்காகப் போராடிய தாய்..!
Published on

கேரளாவில் 13 வருட சட்டப் போராட்டத்தை மேற்கொண்ட தாய் ஒருவர் தனது மகனின் மரணத்திற்கு நீதி பெற்றுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்தவர் பிரபாவதி அம்மா. வயது 67. 13 வருடங்களுக்கு முன் ஒரெயொரு மகனை பறிகொடுத்தார். அதுவும் இயற்கை மரணம் அல்ல. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மகன் உதயகுமார் இறந்துவிட்டதாக பிரபாவதி அம்மாவிற்கு தகவல் மட்டும் வந்துள்ளது. என்ன செய்வதென்று தெரியாமல் உலகமே இருண்டதுபோல தோன்றியிருக்கிறது பிரபாவதி அம்மாவிற்கு. காவல்நிலையத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மகனின் உடம்பில் கொடூரக் காயங்களும் இருந்திருக்கின்றன.

இதனையடுத்து தனது மகனின் மரணத்திற்கு நீதிக் கேட்டு சட்டப்போராட்டத்தை நடத்த முடிவெடுத்தார் பிரபாவதி. அதன் தொடர்ச்சியாக 13 வருடப் போராட்டத்திற்குப் பின் நீதியை பெற்றுள்ளார். இதுதொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் உதயகுமார் காவல்நிலையத்தில் மரணமடைந்தது தொடர்பாக 5 காவலர்கள் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதில் ஜித்துகுமார், ஸ்ரீகுமார் ஆகிய இருவருக்கு அதிகப்பட்ட தண்டனையாக தூக்குத் தண்டனையை நீதிமன்றம் அறிவித்தது. மற்ற மூவருக்கும் தலா 3 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தனது மகனுக்கு நீதி கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் பிரபாவதி அம்மா.

நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் பேசிய அவர், “நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதேசமயம் இப்போது என் மகன் என்னிடம் இல்லை. இந்த 13 வருடப் போராட்டம் என்பது என் மகனுக்கானது. என் வாழ்க்கை என் மகனுக்காக மட்டுமே இருந்தது. என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். அதனால் இந்த 13 வருட போராட்டத்தில் எனக்கு எந்தப் பயமும் இல்லை. இந்த வழக்கில் என் பக்கம் நின்றவர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்திற்கும் என் மனமார்ந்த நன்றி.

நான் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வரும்போதெல்லாம், யாரென்று தெரியாதவர்கள் கூட என்னருகில் வந்து இந்த வழக்கில் இருந்து நீங்கள் பின்வாங்கிவிடக் கூடாது என சொல்லிவிட்டுத் தான் செல்வார்கள். நீதிமன்றத்திற்கு வந்ததை விட என் வாழ்க்கையில் நான் வெளியில் எங்கும் அதிகம் சென்றதில்லை. நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை நிறுத்தக்கூடாது என்றுதான் நான் முடிவு செய்து வைத்திருந்தேன். இந்தத் தீர்ப்பு எனக்கானது மட்டுமல்ல. என்னை போன்ற பாதிக்கப்பட்ட அனைத்து பெற்றோருகளுக்குமானது. என்னை போன்று பாதிக்கப்பட்ட அம்மாக்களும் கூட அதனை எதிர்த்து நிச்சயமாக போராட வேண்டும்.

என்னை கொல்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.  ஆனாலும் இறைவனின் முயற்சியால் ஒவ்வொன்றிலிருந்தும் நான் தப்பித்துவிட்டேன். எங்கள் வீடு அருகே இருக்கும் தெய்வம் எப்போதும் எனக்குத் துணை நிற்கிறது. இப்போது யாராவது என்னை தாக்க முயற்சி மேற்கொண்டால் குறைந்தபட்சம் அவர்கள் மீது கற்களையாவது வீசி விடுவேன். ஏனென்றால் நான் என் மகனை இழந்துவிட்டேன்.

கடந்த 13 வருடங்களாக என் கண்களில் தூக்கம் என்பது இல்லை. இந்த நாட்களில் என்னை ஏளனம் செய்த நபர்கள் ஏராளம். ஆனால் நான் என் பிரார்த்தனையை கைவிடவில்லை. இப்போது தீர்ப்பால் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

பிரபாவதி அம்மா தற்போது தனது சகோதரின் உதவியால் வாழ்ந்து வருகிறார். 13 வருடப் போராட்டம் என்பது மிக எளிமையான ஒன்றல்ல. தன் மகன் மீது பிரபாவதி அம்மா கொண்ட பாசம் அவரை 13 வருடங்கள் விடாமல் போராடத் தூண்டியிருக்கிறது என்பதே உண்மை.

Courtesy: TheNewsMinute

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com