மணிப்பூர் வன்முறை குறித்த பதிவுக்கு கட்டுப்பாடு - FB-க்கு எதிராக கொந்தளித்த 13வயது காலநிலை ஆர்வலர்!

மணிப்பூரின் காலநிலை ஆர்வலரான லிசிப்ரியா கங்குஜத்தின் முகநூல் முடக்கப்பட்டதற்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
மணிப்பூர் வன்முறை, லிசிபிரியா கங்குஜம்
மணிப்பூர் வன்முறை, லிசிபிரியா கங்குஜம்எக்ஸ் தளம்
Published on

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை

மணிப்பூர் வன்முறைக்கு இன்றுவரை தீர்வில்லாமல் இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. சமீபத்தில்கூட வன்முறை அரங்கேறியதில் 11 குக்கி போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்கு மறுநாள், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த 3 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 6 பேர் ஆயுதம் ஏந்திய குழுவினரால் கடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதில் 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில், அவர்கள் 6 பேரும் கடத்தப்பட்ட 5 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டனர்.

இதனால் மணிப்பூரில் போராட்டம் வெடித்தது. அவர்களை மீட்காத ஆளும் அரசைக் கண்டித்து, போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் மாநில முதல்வர் பைரோன் சிங், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வீடுகளில் தாக்குதல் நடத்தினர். தீவைப்புச் சம்பவங்களிலும் ஈடுபட்டனர். பின்னர், கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தி கலைத்தனர்.

காலநிலை ஆர்வலர் வெளியிட்ட பதிவு

இந்த நிலையில், 6 மெய்தி இன பெண்கள் மற்றும் குழந்தைகள் சமீபத்தில் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டது குறித்து மணிப்பூரின் காலநிலை ஆர்வலர் ஒருவர் பதிவிட்டதற்காக அவருடைய முகநூல் முடக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் காலநிலை ஆர்வலராக இருப்பவர், லிசிப்ரியா கங்குஜம். 13 வயதான இவர், மணிப்பூரில் மெய்தி இனப் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்பட்டது குறித்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அவருடைய முகநூல் பக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீண்டும் தனது எக்ஸ் தளப் பக்கத்தின் மூலம் குரல் கொடுத்துள்ளார். அதில், ”இது எனது குரலை அடக்குவதற்கான மற்றொரு முயற்சி. ஆனால் எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் என் குரலை அடக்க முடியாது" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: தீயாய் பரவிய லஞ்ச குற்றச்சாட்டு செய்தி! கடும் வீழ்ச்சியை சந்தித்த அதானி குழும பங்குகள்! நடந்ததுஎன்ன?

மணிப்பூர் வன்முறை, லிசிபிரியா கங்குஜம்
மணிப்பூர்: காணாமல் போன 6 பேர்.. 5 நாட்களுக்குப் பிறகு சடலங்களாக மீட்பு.. மருத்துவமனையில் போராட்டம்!

தொடர்ந்து அடுத்த பதிவில், தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கின் கட்டுப்பாடு குறித்து மெட்டா மற்றும் ஃபேஸ்புக்கிடம் கேள்வி எழுப்பியுள்ளார். "ஃபேஸ்புக்கின் எந்தக் கொள்கையையும் அல்லது சமூகத் தரங்களையும் நான் மீறவில்லை. தயவுசெய்து விரைவில் என் மீதான கட்டுப்பாடை நீக்கம் செய்துவிடுங்கள் .

என் குரலை அடக்க முயற்சிக்க நினைக்காதீர். மிஸ்டர் நரேந்திர மோடி என்னைப் பார்த்து பயப்படுகிறாரே, அதனால் அவருடைய கட்டளைப்படி நீங்கள் வேலை செய்கிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், "உங்கள் சுயவிவரத்திற்கான அணுகல் இந்தியாவிற்குள் தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000இன் பிரிவு 69Aஇன்படி அவசர உத்தரவின்படி Facebook அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த லிசிபிரியா கங்குஜம்?

2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்த இவர், தன்னுடைய 6வது வயது முதல், சுற்றுச்சூழல் ஆர்வலராகச் செயல்பட்டு வருகிறார். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம் நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் முடியும் என அவர் நம்புகிறார். உலக அளவில் இளைய காலநிலை ஆர்வலர்களில் ஒருவரான இவர், ஸ்பெயினின் மாட்ரிட்டில் நடந்த ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடு 2019 (COP25)இல் உலகத் தலைவர்கள் முன்பு உரையாற்றி கவனம் ஈர்த்தார்.

அப்போது, உலகத் தலைவர்கள் தங்கள் எதிர்காலத்தைக் காப்பாற்ற உடனடி காலநிலை நடவடிக்கைகளை எடுக்குமாறு அழைப்பு விடுத்தார். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை ஊக்குவிக்கும் ஓர் இளம்தலைவராக வலம் வரும் அவர், உலகில் காலநிலை மாற்றத்திற்கான முன்னணி குரல் கொடுப்பதில் ஒருவராகவும் திகழ்கிறார். இந்தியாவின் அதிக மாசு அளவைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்களை இயற்றவும், பள்ளிகளில் காலநிலை மாற்ற எழுத்தறிவை கட்டாயமாக்கவும் லிசிப்ரியா நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் காலநிலை நடவடிக்கைக்காக பிரசாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு, துபாயில், COP28 எனும் காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்த 28வது உச்சி மாநாட்டில், டைமோர் லெஸ்டே நாட்டின் சிறப்புத் தூதராகக் கலந்துகொண்ட இவர், அந்த மாநாட்டு மேடையில், ’புதைபடிம எரிவாயுக்களுக்குத் தடை விதியுங்கள். நம் பூமியைக் காப்பாற்றுங்கள்’ என எழுதப்பட்டிருந்த வாசகத்துடன் கூடிய ஒரு பதாகையுடன் மேடை ஏறினார். இதனைக் கண்ட பார்வையாளர்கள் பலரும் வரவேற்று கைதட்டினர். ஆனாலும் அவருடைய நடவடிக்கை விதிகளுக்குப் புறம்பானது என்பதால் அவர் மாநாட்டில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் அங்கிருந்த காவலர்களாலும் அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மசோதாவிற்கு எதிர்ப்பு | திரண்ட 42,000 பேர்.. மாவோரி இன மக்களின் போராட்டத்தால் திணறிய நியூசிலாந்து!

மணிப்பூர் வன்முறை, லிசிபிரியா கங்குஜம்
'நம் பூமியை காப்பாத்துங்க' மேடையில் திடீரென முழங்கிய மணிப்பூர் சிறுமி..COP28 மாநாட்டில் நடந்ததுஎன்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com