பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 13 வயது சிறுமியின் 31 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மும்பை சார்கோப் பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமி 6 மாதங்களுக்கு முன்பு தனது தந்தையின் நண்பரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இதனையடுத்து தனது மகளின் உடல் எடை திடீரென அதிகரித்ததை கண்டு அவளது பெற்றோர் மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அப்போது, சிறுமி கர்ப்பமாகி 27 வாரங்கள் ஆனது தெரிய வந்தது. அதுவரை தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை சிறுமி யாரிடமும் சொல்லவில்லை.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க வலியுறுத்தி அவளது தாய் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவா ராய் மற்றும் கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் போது, சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் வாதிடுகையில் “36 அல்லது 37-வது வாரத்தில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் ஆகும். ஆனால் 31 வாரங்கள் கடந்துவிட்டது. 20 வாரங்கள் தாண்டிய நிலையில் கருவை கலைக்க சட்டப்படி அனுமதி இல்லை” என்றார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர் சினேகா முகர்ஜி, “27 வாரத்தில்தான் கர்ப்பம் தரித்திருப்பது தெரியவந்தது. அந்த சிறுமிக்கு தற்போது தான் கார்ப்பமாக இருப்பது தெரியும். இதனால் அவள் மிகவும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். கருவை கலைப்பதுதான் சிறுமிக்கு நல்லது” என்றார்.
இதனையடுத்து, 31 வாரங்கள் ஆன நிலையில் கருவை கலைக்கப்பது தொடர்பாக மும்பை ஜே.ஜே. மருத்துவமனையின் மருத்துவ குழுவிடம் அறிக்கை கேட்டது உச்சநீதிமன்றம். கருவை கலைக்க முடியும் என்று பரிந்துரை செய்து மருத்துவ குழுவும் கடந்த வாரம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் வயதினை கருத்தில் கொண்டு 31 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 13 வயது சிறுமி எப்படி தாய் ஆக முடியும்? என்று நீதிபதி தீபக் மிஸ்ரா கேள்வி எழுப்பினார். மருத்துவ நடவடிக்கைகள் செப்டம்பர் 8 ஆம் தேதி மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன்பு பாலியல் வன்கொடுக்கு ஆளான 10 வயது சிறுமி ஒருவரின் 32 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.