அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அங்கு அமைய உள்ள கோயில் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்வோம்.
ராமர் கோயில் கட்ட தற்போதுதான் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அக்கோயிலுக்கான மாதிரி வடிவம் ஏற்கெனவே தயாராகி விட்டது. அம்மாதிரி வடிவம் கர்சேவக் புரம் என்ற இடத்தில் உள்ளது. இம்மாதிரி கட்டடத்தை அனைத்து இந்து அமைப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. டெல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற அக்ஷர்தாம் கோயிலை வடிவமைத்த சிபி சோம்புரா என்பவர் மேற்பார்வையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவரது தாத்தா தான் குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதர் ஆலயத்தை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராமர் கோயிலின் கருவறையில் ராம் லல்லா என்று சொல்லப்படக்கூடிய குழந்தை ராமரின் சிலை மூலவராக வைக்கப்பட உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ராம் தர்பார் என்ற மிகப் பெரிய மண்டபம் கட்டப்பட உள்ளது. பிறகு மிக பிரம்மாண்டமான முறையில் நுழைவு மண்டபமும் சேர்த்து அமைக்கப்பட உள்ளது. மார்பிள் கிரானைட் செங்கல் கருங்கல் போன்ற பலவித கற்களையும் கொண்டு வலுவான முறையில் கோயில் அமைய உள்ளது. தரைத்தளம் முதல் தளம் என இரண்டு தளங்களாக கோயில் அமைய உள்ளது.
கோயில் 270 அடி நீளமும், 135 அடி அகலமும், 125 அடி உயரமும் கொண்டு அமைக்கப்படும் எனத் தெரிகிறது. இரண்டு மாடி கோயிலின் ஒவ்வொரு தளத்திலும் 106 தூண்கள் இருக்கும். கோயிலின் உட்புறச் சுவற்றில் ராமனின் வரலாற்றை விளக்கும் வண்ண படங்கள் வரையப்பட உள்ளது. இது தவிர கோயில் பிரமாண்டமான முறையில் அமைவதற்காக ஏராளமான யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோயில் குறித்த திட்டங்கள் மற்றும் யோசனைகள் தொடர்பாக இந்து அமைப்புகளுடன் மத்திய அரசு மற்றும் உத்தர பிரதேச மாநில அரசுகள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.