மத்தியப் பிரதேசத்தில் உஜ்ஜயினியில் தண்டி ஆசிரமம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். மேலும், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அந்தச் சிறுமி ரத்தக்கறை படிந்த ஆடையோடு உஜ்ஜயினி சாலையில் ஒவ்வொரு வீடாகச் சென்று உதவி கேட்கிறார். ஆனால் யாரும் உதவி செய்யவில்லை.
அதிலும் ஒருவர், அந்தச் சிறுமியை விரட்டியடிக்கிறார். இந்த வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி அனைவரின் இதயங்களையும் கனக்க வைத்துள்ளது.
இதற்குப் பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அந்தச் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது.
அந்தச் சிறுமிக்கு எதிராக நடைபெற்ற கொடூரமான குற்றமும், அரைநிர்வாணமாக நகரின் பல பகுதிகளில் அவர் ஓடிய விதமும் மனிதநேயத்தை வெட்கப்பட வைக்கிறது. இதன்மூலம் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. மக்கள் சிரமப்படும் வேளையில் குற்றமிழைப்பவர்கள் சுதந்திரமாகத் திரிகின்றனர்” என தன்னுடைய வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ”2012 நிர்பயா வழக்கைவிட, இந்தச் சம்பவம் மிகவும் கொடூரமானது. மத்தியப் பிரதேசத்தில் தினமும் எட்டு பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அரங்கேறுகின்றன. ஓர் அப்பாவி 12 வயது சிறுமிக்கு நீதி வழங்கமுடியாத பாஜக அரசு, ஒரு நிமிடம்கூட ஆட்சியில் இருக்க தகுதி இல்லை” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் நாரோத்தம் மிஸ்ரா, “இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சிறுமியைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவரால் இப்போது சரியாக பேசமுடியவில்லை. அவரை பேசவைக்க முயல்கிறோம். மற்றபடி சிறுமி தற்போது நலமுடன் உள்ளார்; அபாயகட்டத்தை தாண்டிவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து நடிகையும் பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு, ஏற்கெனவே தன் வேதனையைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.