கடலில் உள்ள மாசுகளை அப்புறப்படுத்தும் வகையில் புனேவை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவர் கப்பல் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
புனேவை சேர்ந்த 12 வயது சிறுவன் ஹாசிக் காஸி. இவர் கடலில் உள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட மாசுகளை அப்புறப்படுத்தும் வகையில் கப்பல் ஒன்றை வடிவமைத்துள்ளார். இவர் வடிவமைத்துள்ள கப்பலின் அடிப்பகுதியில் இயந்திரம் ஒன்று உள்ளது. இந்த இயந்திரம் கடலில் உள்ள பிளாஸ்டிக் மாசுக்களை அப்படியே மேலே உறிஞ்சுகிறது. அப்படி உறிஞ்சும்போது சேர்ந்து மேலேவரும், கடல்வாழ் உயிரினங்கள், கடல் நீர் ஆகியவற்றை மேலே கொண்டுவர விடாமல் அப்படியே கீழேயே விட்டுவிடுகிறது. வெறும் பிளாஸ்டிக் உள்ளிட்ட மாசுக்களை மட்டும் மேலே எடுக்கிறது. பின்னர் மாசின் அளவை பொறுத்து அதனை 5 வகைகளாக பிரித்து வெளியேற்றுகிறது. இந்த கப்பலிற்கு ERVIS என்று அந்த சிறுவன் பெயரிட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுவன் கூறும்போது, “ நான் சில ஆவணங்களை பார்த்தபோது கடலில் உள்ள மாசுக்களால் எவ்வளவு தாக்கம் உண்டாகிறது என்பதை புரியமுடிந்தது. கடலில் இருந்து கொண்டுவரப்படும் மீன்களை நாம் உணவாக உட்கொள்கிறோம். ஆனால் அந்த மீன் கடலிலில் உள்ள பிளாஸ்டிக் உள்ள மாசுகளை உட்கொள்கிறது. அப்படியென்றால், மாசு சுழற்றி முறையில் மனிதனையே வந்தடைகிறது. இதனால் மனித உயிர்தான் பாதிக்கப்படுகிறது. அதனால் 9 வயதில் இருக்கும்போது கடல்வாழ் உயிரினங்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என நினைத்தபோது நினைவில் வந்து உருவாக்கப்பட்டதுதான் இந்த கப்பல்” எனக் கூறினார். சர்வதேச அரங்கில் கூட ஹாசிக் காஸி தனது படைப்பை முன்வைத்துள்ளர். அவரின் இந்த சாதனைக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.