இந்தியா ஏவிய ஏவுகணைதான் இந்திய விமானப்படையைச் சேர்ந்த எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டரை தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே பதட்டம் நிலவி வந்தது. இரு நாட்டு எல்லையிலும் கூடுதல் பாதுகாப்பு நிலவியது. அப்போது பிப்ரவரி 27ம் தேதி இந்திய விமானப்படையைச் சேர்ந்த எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீநகரில் உள்ள ஏவுகணைத்தளத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை மூலமாகவே இந்திய ஹெலிகாப்டர் தாக்கப்பட்டது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏவுகணை விண்ணில் ஏவப்பட்ட 12 நொடிகளில் எம்.ஐ-17 ரக ஹெலிகாப்ட்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இது அதிகாரிகளின் தவறுதலால் நடந்துள்ளதாகவும் NDTV செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து NDTV வெளியிட்ட தகவலின்படி, '' புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய எல்லைகள் பலப்படுத்தப்பட்டன. காஷ்மீரில் உள்ள ஏவுகணைத் தளங்கள் உஷார் படுத்தப்பட்டன. பாக் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தால் உடனடியாக சுட்டுவீழ்த்த உத்தரவிடப்பட்டிருந்தது. அப்போது குறைந்த உயரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று பறப்பது ரேடாரில் தெரியவந்தது. அது யாருக்கும் சொந்தமானது என்பதை கண்டுகொள்ள முடியவில்லை. உடனடியாக அதன் மீது இந்திய ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
விமானம் யாருடையது என்பதை கண்டுபிடிக்க கடைபிடிக்கும் IFF தொழில்நுட்ப முறை சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்திய விமானப் படை விமானம்தானா என்பதை தெரிந்து கொள்ள பல சோதனைகள் இருக்கின்றன எனவும், அவசர முடிவில் எதுவும் சரிவர பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்திய விமானப்படை உயர் அதிகாரிகள் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பான இறுதி அறிக்கை இன்னும் 20 நாட்களில் அளிக்கப்படவுள்ளது. அதன் பிறகே உறுதியான தகவலும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரியவரும் என கூறப்படுகிறது