இந்தியாவுக்கு இரண்டாம் கட்டமாக 12 சிவிங்கிப் புலிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இம்மாதம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அழிந்துபோன இனமாக இருந்த சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் கொண்டுவரப்பட்டன. அவற்றை, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமா் மோடி தனது பிறந்த நாளன்று திறந்துவிட்டாா். இந்த சிவிங்கிப் புலிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வனப்பகுதியில் திறந்து விடப்பட்டன. சிவிங்கிப் புலிகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கிப் புலிகள் இம்மாதம் 20ஆம் தேதி கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘கடந்த 6 மாதங்களாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த சிவிங்கிப் புலிகளை, இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையொப்பமாகும். இந்த 12 சிவிங்கிப் புலிகளும் குனோ தேசியப் பூங்காவில் பராமரிக்கப்படும்’ என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்துடன் தொடர்புடைய தென்னாப்பிரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், ''நாட்டின் ஜனாதிபதி சிறில் ரமபோசா 12 சிவிங்கிப் புலிகளை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான கொள்கை ரீதியான ஒப்புதலை அளித்துள்ளார். இந்த திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்னும் ஒரு வாரத்தில் இறுதி செய்யப்படும்'' என்று கூறினார்.
மேலும் இதுகுறித்து இந்திய சுற்றுச்சூழல் அமைச்சத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வனத்துறை இயக்குநர் ஜெனரல் சந்திர பிரகாஷ் கோயல், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) உறுப்பினர் செயலர் எஸ்.பி.யாதவ் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் மற்ற அதிகாரிகள் அடங்கிய குழு வரும் ஜனவரி 13ஆம் தேதி டெல்லியில் இருந்து தென்னாப்பிரிக்கா சென்று சிவிங்கிப் புலிகளை கொண்டு வருவார்கள்” என்று கூறினார்.