குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி துலாபாரம் கொடுக்க இருக்கிறார். இதற்காக 112 கிலோ தாமரைப்பூக்கள் தயார் நிலையில் வைக்கப் படுகின்றன.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 302 இடங்களில் கைப்பற்றியது. இதையடுத்து 2 வது முறையாக மோடி, கடந்த 30 ஆம் தேதி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் கேரள மாநிலம் குருவாயூர் கோவிலுக்கு நாளை காலை செல்கிறார்.
இதற்காக தனி விமானம் மூலம் இரவு 11.35 மணிக்கு கொச்சி வரும் அவர், அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் அவர் இரவில் ஓய்வெடுக் கிறார். நாளை காலை 9 மணிக்கு அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு குருவாயூர் செல்கிறார். காலை 10 மணி முதல் 11.10 மணி வரை சாமி தரிசனம் செய்கிறார். அங்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்படுகின்றன. அவர் அங்கு துலாபாரம் கொடுக்க இருக்கிறார்.
எடைக்கு எடை தாமரைப்பூக்களை அவர் கொடுக்க இருக்கிறார். இதற்காக 112 கிலோ தாமரைப்பூக்கள் தயார் நிலையில் வைக்கப்படுகின்றன.
இந்த தரிசனத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் கொச்சி செல்லும் மோடி, அங்கிருந்து மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.