கேரள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த 110 வயதான மூதாட்டி பாதிப்பிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
மலப்புரம் மாவட்டம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொரோனா அறிகுறியுடன் 110 வயதான மூதாட்டி ரந்தாதனி வரியாத் பத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று மகள் மூலமாக ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மூதாட்டிக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு இப்போது பூரண நலம் பெற்று நேற்று டிஸ்சாரஜ் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜா கூறும்போது "மருத்துவமனையில் அனுமதிக்கும்போதே பத்துவுக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்தது. ஆனால் அவரின் வயதை கணக்கில்கொண்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே அவர் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். 110 வயதான மூதாட்டி கொரோனாவில் இருந்து மீண்டது மிகவும் பெருமையாக இருக்கிறது" என தெரிவித்தார்.
மூதாட்டி மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் அவர் வீட்டில் 14 நாள்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பார். ஏற்கெனவே கேரளாவில் 105 வயதான மூதாட்டி, 103 வயதான முதியவர் கொரோனாவில் இருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது.