ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
பூஞ்ச் மாவட்டத்திலுள்ள ராக்கி பள்ளத்தாக்குப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான பேருந்து லாரன் பகுதியில் இருந்து பூஞ்ச் நோக்கி சென்று கொண்டிருந்தது. ராக்கி பள்ளத்தாக்கின் வளைவு ஒன்றில் வேகமாக சென்ற போது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில், 11 பேர் உயிரிழந்ததோடு, ஏராளமானோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு அதிக காயம் ஏற்பட்டுள்ளதாக உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து பூஞ்ச் மாவட்ட அதிகாரி ராகுல் யாதவ் கூறுகையில், “11 பேர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. 34 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர காயம் அடைந்தவர்களை விமானம் மூலம் வேறு இடங்களுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். அரசு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும்” என்றார்.