ஆந்திர மாநில மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 11 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பதியில் உள்ள ரூய் அரசு மருத்துவமனையில் இரவு 8 மணியளவில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்துவதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் பலர் உயிருக்கு போராடிய நிலையில் உறவினர்களும், மருத்துவப் பணியாளர்களும் செய்வதறியாது தவித்தனர். 5 நிமிட இடைவெளியில் 11 உயிரிழப்புகள் நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் சென்னையில் இருந்து செல்ல வேண்டிய ஆக்சிஜனும் தாமதமாக சென்று சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. நிலைமை மோசமான நிலையில் 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நோயாளிகளின் உயிரை காக்க போராடி வருகின்றனர்.
ஆக்சிஜன் டேங்கர் தற்போது சென்று சேர்ந்துள்ள நிலையில், நிலைமை மேலும் மோசமாகாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரிநாரயணன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.