ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் என்.டி. ராமாராவிற்கு 109 அடியில் சிலை அமைக்கு திட்டத்தை ஆந்திர அரசு தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை போல, ஆந்திராவில் புகழ் பெற்ற முதலமைச்சராக திகழ்ந்தவர் என்.டி.ராமாரவ். தற்போதைய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவரது மருமகன் ஆவார். கடந்த 2016ஆம் ஆண்டு முதலமைச்சர் சந்திரபாபு வெளியிட்ட அறிவிப்பில், என்.டி.ஆருக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆந்திராவின் தலைநகரமான அமராவதியின் நதிக்கரையில் என்.டி.ஆருக்கு 109 அடியில் பிரமாண்ட சிலை அமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளன.
செப்பு உலோகத்தைக் கொண்டு உருவாக்கப்படும் இந்தச் சிலைக்கு ரூ.406 கோடி செலவிடப்படவுள்ளது. அமராவதி நகரத்தின் சாலையில் இருந்து பார்த்தால் நதிக்கரையின் குன்றின் மீது அழகாக காட்சியளிக்கும் வகையில் சிலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான பிரபல கட்டுமான நிறுவனமான ‘எல் அண்ட் டி’ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சந்திரபாபு நாயுடு ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்தச் சிலையின் உள்ளேயே மேலே செல்லக்கூடிய லிப்ட் வசதி செய்யப்படவுள்ளது. அத்துடன் சிலையின் கீழே நதிக்கரையில் நீர்தேக்கம், படகு சவாரி, அரங்கம் மற்றும் செல்ஃபி போட்டோ எடுக்கும் இடங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. அதுமட்டுமின்றி திரையரங்கம், ஓட்டல்கள், ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்டுகள் மற்றும் ரெசார்ட்டுகள் அமைக்கப்படுகின்றன.
சிலைக்காக மட்டும் 14 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றவைகளுக்கு சுமார் 70 முதல் 80 ஏக்கர் நிலம் வரை கையகப்படுத்தப்படுகிறது. இந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கும் பணிகள் சரியாக 48 மாதங்களில் நிறைவடையும் படி திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர அமராவதியில் 5 கட்டடங்கள் கொண்ட தலைமைச் செயலகமும் கட்டப்படுகிறது.