‘இவர் பாகிஸ்தான் ஏஜெண்ட்?’ - பாஜக விமர்சனத்தால் சர்ச்சையான சுதந்திரப்போராட்ட தியாகி

‘இவர் பாகிஸ்தான் ஏஜெண்ட்?’ - பாஜக விமர்சனத்தால் சர்ச்சையான சுதந்திரப்போராட்ட தியாகி
‘இவர் பாகிஸ்தான் ஏஜெண்ட்?’ - பாஜக விமர்சனத்தால் சர்ச்சையான சுதந்திரப்போராட்ட தியாகி
Published on

கர்நாடகாவில் 102 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் தியாக வாழ்க்கை சர்ச்சையாக மாறியுள்ளது.

102 வயதான இந்த முதியவர் தெற்கு பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் ஒரு அறையில் உட்கார்ந்திருக்கிறார். அந்த அறையில் மங்கலான வெளிச்சம் மட்டுமே இருக்கிறது. அவர் வீட்டில் அவர் யாருக்கும் தெரியாமல் மங்கலான வெளிச்சத்தில் இருக்கலாம். ஆனால் அவர் இன்று கர்நாடகாவில் தலைப்புச் செய்தியாகி இருக்கிறார். அவரைப் பற்றி பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். யார் இந்த முதியவர்? இவருக்கு திடீர் வெளிச்சம் வரும் அளவுக்கு என்ன சாதனை செய்திருக்கிறார்? எனப் பலரும் யோசிக்கலாம். ஆனால், அவருக்கு இன்று கிடைத்திருக்கும் வெளிச்சம் நேர்மையானதல்ல; எதிர்மறையானது. அவர் மனம் சங்கடப்படும் அளவுக்கானது.

இவர் குறித்து ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களது நிருபர் அவரைச் சந்திக்கச் சென்ற போது அவர் ஒரு நோட்டை எடுத்து காட்டியுள்ளார். “நான் என் வாழ்க்கையை எழுதிக் கொண்டிருக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார். இந்த 102 வயது முதியவர் பெயர் ஹெச்.எஸ். தொரெஸ்வாமி. அவர் கைகளில் நிறைய காகிதங்கள் உள்ளன. அவர் எழுதி மீண்டும் இந்தச் சமூகத்திற்கு தன்னை யார் என எடுத்து சொல்வதற்காக முனைந்து கொண்டிருக்கிறார். அந்தக் காகிதங்களைக் காட்டி, “இதில் ஏதேனும் தேச விரோதம் இருக்கிறதா? எனச் சொல்லுங்கள்” என வீடு தேடி வந்த நிருபரிடம் காட்டிக் கேள்வி எழுப்புகிறார். அவர் முகத்தில் ஏதோ ஒரு வேதனை வெளிப்படுகிறது.

102 வயதான தொரெசாமி(துரை சாமியாகக்கூட இருக்கலாம்) 1918 இல் பிறந்தவர். காந்தி தொடங்கிய ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் இணைந்து இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர் தான் இந்தத் தொரெஸ்வாமி. மேலும், வினோபாவின் பூமி தான இயக்கத்திலும் இணைந்து களப்பணி செய்தவர்.

இன்று இவரது சாதனையான அந்த வாழ்க்கை சர்ச்சையாகி இருக்கிறது. அரசியல் புயலில் அவர் பரபரப்பான நபராக மாறியிருக்கிறார். பிஜப்பூரைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசங்கவுடா பாட்டீல் யட்னல், இவரை ‘போலியான சுதந்திர போராளி’ என்று பகிரங்கமாக விமர்சித்தார். மேலும் இவரை ‘பாகிஸ்தான் ஏஜெண்ட்’ என்று கூறியிருந்தார். சுதந்திரத்தில் இவர் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை கேட்டு கேள்வி எழுப்பினார். அன்று தொடங்கியது சர்ச்சை. அதன் பொருட்டுதான் தொரெஸ்சாமி இன்று சர்ச்சைக்குரிய நபராக தலைப்புச் செய்தியாகி உள்ளார். இந்தக் குற்றச்சாட்டை பாஜகவின் மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கூட ஆமோதித்து பேசினார். ஆகவே, இன்னும் கவனத்திற்கு உரிய நபராக மாறினார் இந்தச் சுதந்திரப் போரட்ட தியாகி.

இந்தக் குற்றச்சாட்டை முறியடிக்கும் நோக்கில் மாநில காங்கிரஸ் களத்தில் குதித்தது. பெங்களூரு மத்திய சிறையின் மூத்த கண்காணிப்பாளரால் 1971 தேதி கையெழுத்திடப்பட்ட ஒரு ஆவணத்தை காங்கிரஸ் பெற்றது. அதில், 25 வயதான திருமணம் ஆகாத மனிதராக, தொரெஸ்வாமி “1942 டிசம்பர் 18 முதல் இங்கு சிறையில் அடைக்கப்பட்டார்” என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் 1943 டிசம்பர் 8 வரை சிறையில் இருந்ததும் உறுதியாகியுள்ளது.

இத்தனை பிரச்னைகளும் தொரெஸ்வாமி குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான பேரணியில் கலந்து கொண்டதால் உருவானது. அதனை வைத்தே அவர் ‘அந்நியநாட்டு கைக்கூலி’ என அவரை விமர்சித்தனர். ஆனால், தொரெஸ்வாமி இன்றும் ஒரு சமூக போராளியாக இருந்து வருகிறார் என்கிறார் வரலாற்று ஆசிரியரான ராமசந்திர குஹா. அவர், “மிகுந்த ஒழுக்கமும் நேர்மையும் கொண்ட மனிதர். அவர் பல சமூக மற்றும் சுற்றுச்சூழல் இயக்கங்களின் ஒரு அங்கமாக இருந்து வருகிறார். விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்களுக்காக பேசியிருக்கிறார். காங்கிரஸ் அரசாங்கங்களின் பினாமி நில ஒப்பந்தங்களை அவர் விமர்சித்துள்ளார்” எனக் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com