பீகார் மாநிலத்தில் பிளஸ்2வில் மோசடி செய்து தேர்வு எழுதிய 1000திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
தேர்வு நேரத்தில் காப்பி அடித்து எழுதுவது, பிட் அடித்து எழுதுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். இந்தியாவின் எந்த மாநிலமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. பீகார் மாநிலம் இதில் சற்று வித்தியாசமானது. தேர்வு நடைபெறும் அறைகளின் ஜன்னல்களில் ஒரு பெரிய கூட்டமே புத்தகத்தையும், பிட்டு தாள்களை கொடுக்கும் புகைப்படங்கள் பலமுறை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில், பிளஸ்2 தேர்வில் டாப் மார்க் வாங்கிய மாணவர்கள், அடிப்படை கேள்விகளுக்கு கூட விடை தெரியாமல் சிக்கும் சம்பவங்களும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி பிளஸ்2 தேர்வுகள் தொடங்கியது. கிட்டத்தட்ட ஒரு கோடியே 12 லட்சத்து 7 ஆயிரத்து 986 மாணவர்கள், 1,384 செண்டர்களில் தேர்வு எழுதி வருகின்றனர். கடந்த காலங்களில் தேர்வு எழுதும் அறைகளில் மாபெரும் சீட்டிங் சம்பங்கள் அரங்கேறியுள்ளதால், இந்த முறை கண்காணிப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 1000 மாணவர்கள் தேர்வில் மோசடி செய்ததாக தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்வு வாரியத் தலைவர் ஆனந்த் கிஷோர், முந்தையை காலங்களை போல் இனி தவறுகள் நடக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.