கல்யாண வீட்டில் அல்வா தந்த சிக்கல்: ஒரு சுவாரஸ்ய பரிதாபம்!

கல்யாண வீட்டில் அல்வா தந்த சிக்கல்: ஒரு சுவாரஸ்ய பரிதாபம்!
கல்யாண வீட்டில் அல்வா தந்த சிக்கல்: ஒரு சுவாரஸ்ய பரிதாபம்!
Published on

’வாத்தியார் மகன் மக்கு, போலீஸ்காரர் மகன் திருடன்’ என்பது போல எப்போதாவது இப்படியும் சில சம்பவங்கள் நடந்துவிடுகிறது.

மகாராஷ்ட்ரா மாநிலம் பல்ஹார் அருகில் உள்ள மகுன்சரைச் சேர்ந்தவர் விவேக் பாலகிருஷ்ணா வர்டக். கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவர் மகளுக்கு நேற்று திருமணம். சுமார் 800 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. வந்திருந்த விருந்தினர்கள், மணமக்களை வாழ்த்திவிட்டு மதிய சாப்பாட்டுக்கு பந்தியில் உட்கார்ந்தனர். ’சமையல்காரர் வீட்டுக் கல்யாணமாச்சே... கண்டிப்பாக பிரமாதப்படுத்தியிருப்பார்’ என்ற நம்பிக்கையில் ஆசையாக உட்கார்ந்தனர். 

எதிர்பார்த்ததைப் போலவே விதவிதமான வகைகள். ருசியாகவும் இருந்ததால் ரசித்து சுவைத்து சாப்பிட்டனர். பந்தியில் வைக்கப்பட்ட உணவு பண்டங்களில் கேரட் அல்வாவும் ஒன்று. எல்லோரும் இரண்டு முறை வாங்கி சாப்பிட்டனர். பிறகுதான் சிக்கல். அல்வாவை அளவில்லாமல் தின்றவர்களுக்கு வயிற்று வலி. எல்லோரும் பாத்ரூமே கதியென்று கிடக்க, உடல் நிலையும் மோசமடைந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் அக்கம் பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஷயம் போலீசுக்கு தெரிந்து அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தனர். பின்னர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சபாலே மற்றும் மஹிம் பகுதி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் தின்கர் கேவிட் கூறும்போது, ‘பாதிக்கப்பட்ட அனைவரும் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டனர். அவர்கள் சாப்பிட்ட உணவின் சாம்பிள்களை எடுத்து பரிசோதனைக்காக அரசு லேப்புக்கு அனுப்பியுள்ளோம். முடிவு வந்ததும் உடல் நிலை மோசமானதற்கான காரணம் தெரிய வரும்’ என்றார். 

சமையல்காரர் வீட்டு சாப்பாட்டிலேயே வில்லங்கம் ஏற்பட்டிருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com