உலக அளவில் 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7 லட்சம் கோடி) சொத்து வைத்திருப்போர் பட்டியலில் புதுவரவாக இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபராக கெளதம் அதானி இணைந்திருக்கிறார்.
கவுதம் அதானி இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் துறைமுகங்கள், சுரங்கங்கள், இயற்கை எரிவாயு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இந்திய அரசின் உள்கட்டமைப்புப் பணிகளில் இவரது நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
குறிப்பாக, உள்கட்டமைப்புத் துறையில் கவனம் செலுத்திய பிறகே அதானியின் சொத்து மதிப்பு வெகுவாக உயரத் தொடங்கியது. அதன்படி, கடந்த ஓராண்டில் மட்டும் 24 பில்லியன் டாலர்களை இவர் ஈட்டியிருக்கிறார். நூற்றுக்கணக்கான வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டை ஈர்த்ததன் காரணமாக அவரது சொத்து மதிப்பு அபரிமிதமான வளர்ச்சியை எட்டியது.
இந்நிலையில், கெளதம் அதானியின் சொத்து மதிப்பு தற்போது 100 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது. இதனால் உலக செல்வந்தர்களான அமேசான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பெஸோஸ், டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் ஆகியோர் இடம்பெற்றுள்ள 100 பில்லியன் டாலர் சொத்து வைத்திருப்போர் பட்டியலில் கெளதம் அதானியும் இணைந்திருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி இணைந்தார்.
ஆனால், அவரது சொத்து மதிப்பு தற்போது 99 பில்லியன் டாலரை விட குறையத் தொடங்கியிருக்கிறது. அதேபோல, கடந்த பிப்ரவரி மாதம் ஆசியாவிலேயே முதல் பணக்காரர் என்ற அந்தஸ்தையும் கெளதம் அதானி பெற்றது குறிப்பிடத்தக்கது.