பழுது பார்க்க கொடுத்த சைக்கிளை மீட்டு தருமாறு சிறுவன் ஒருவன் காவல்துறைக்கு புகார் அளித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் விளையாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அபின்(10). இவர் அருகிலுள்ள பள்ளி ஒன்றில் பயின்று வருகிறார். இவருடைய சைக்கிளையும் இவரது சகோதரரின் சைக்கிளையும் கடந்த மாதம் 5ஆம் தேதி பழுது பார்ப்பதற்கு ஒரு சைக்கிள் கடையில் அபின் கொடுத்துள்ளார். நீண்ட நாட்கள் ஆகியும் சைக்கிள் திரும்பி வராததால் அபின் இது தொடர்பாக காவல்துறைக்கு தனது கைப்பட ஒரு புகார் கடிதத்தை எழுதியுள்ளார்.
அதில்,“நான் என்னுடைய சைக்கிளை கடந்த மாதம் 5ஆம் தேதி பழுது பார்க்க கொடுத்தேன். அப்போது கடைக்காரர் எங்களிடமிருந்து 200 ரூபாய் பெற்றுக் கொண்டு சைக்கிளை பழுது பார்த்து தருவதாக கூறினார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவர் சைக்கிள்களை திருப்பி தரவில்லை. அத்துடன் நான் அங்குச் சென்று பார்த்த போது கடை மூடியுள்ளது. மேலும் நான் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டால், அவர்கள் பழுது பார்த்து தருவதாக கூறுகிறார்கள். இதனைச் சென்று கேட்பதற்கு எங்கள் வீட்டில் தகுந்த நபர் இல்லை. ஆகவே இது தொடர்பாக நீங்கள் விசாரணை நடத்தி சைக்கிளை விரைவில் பெற்று தரவேண்டும்” என எழுதியுள்ளார்.
இதுகுறித்து மெப்பாயூர் காவல்துறை அதிகாரி, “10 வயது மதிக்க தக்க பள்ளி மாணவர் ஒருவர் அவருடைய கைப்பட புகார் கடிதம் ஒன்றை எழுதி கொடுத்தார். அதில் அவரது சைக்கிளை மீட்டு தரக் கோரினார். அவர் தனியாக காவல்நிலையத்திற்கு வந்து புகார் அளித்தது மிகவும் வியப்பாக இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் சம்பந்தப்பட்ட சைக்கிள் கடைக்காரரை விசாரித்தோம். அவர் தனது மகனின் திருமணத்தால் சைக்கிளை பழுது பார்க்க முடியவில்லை என்று தெரிவித்தார். இந்தச் சைக்கிளை அவர் வரும் வியாழக்கிழமை திருப்பி தருவதாக கூறியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.