உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று காலை 9 மணி அளவில் நேரு மலையேறும் பயிற்சி நிறுவனத்திலிருந்து 34 பயிற்சியாளர்கள் மற்றும் 7 பயிற்றுனர்கள் உட்பட மொத்தம் 41 பேர் பேர் கொண்ட குழு ஒன்று உத்தரகாண்ட் மாநிலம், கர்வாவில் கங்கோத்ரி மலைத்தொடரின் திரௌபதி தண்டா உச்சியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பனிச்சரிவில் அந்தக் குழு சிக்கியது. இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகத்துடன், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகளும், ராணுவ வீரர்களும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் இந்திய விமானப் படையின் இரண்டு ஹெலிகாப்டர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், பனிச்சரிவில் சிக்கியவர்களில் 10 பேர் உயிரிழந்துவிட்டதாகத் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி மீட்புப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார். மேலும், மீட்புப்பணிகளில் ராணுவ வீரர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசியதாக முதல்வர் தெரிவித்தார்.
காயமடைந்த மலையேறும் பயிற்சியாளர்கள் அனைவரும் ஹெலிபேட் அமைந்து இருக்கும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு உத்தராகண்ட் தலைநகர் டேராடூனில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உயரதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மீட்புப் படையினர் முழு வீச்சில் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.