ராஜஸ்தான் மாநிலத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு நிகழ்ந்த விபத்தில் பயணிகள் 10 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், தண்டவாளத்தில் கவிழ்ந்து கிடக்கும் ரெயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதால் 12 ரயில்கள் திருப்பி விடப்பட்டன.
ராஜஸ்தான் மாநிலம் பாலி அருகே இன்று அதிகாலை சூர்யநகரி எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. ஜோத்பூர் பிரிவின் ராஜ்கியாவாஸ்-போமத்ரா பிரிவுக்கு இடையே அதிகாலை 3.27 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாந்த்ரா டெர்மினஸில் இருந்து புறப்பட்ட இந்த ரயில், ஜோத்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஜோத்பூரில் இருந்து ரயில்வே மூலம் விபத்து நிவாரண ரயில் அனுப்பப்பட்டுள்ளது என்றும், சம்பவத்தை அடுத்து, உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் உதவி எண்களையும் ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஜோத்பூருக்கு 02912654979, 02912654993, 02912624125, 02912431646 என்ற எண்களையும், பாலி மர்வாருக்கு 02932250324 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும், பயணிகள் மற்றும் பயணிகளின் குடும்பத்தினர் தகவல் எதுவும் தேவைப்பட்டால் இந்த எண்ணை தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு ரயில்வே தெரிவித்துள்ளது.