கடந்த ஓராண்டில் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற குற்றத்துக்காக ஒரு மணி நேரத்திற்கு 10 இந்தியர்கள் வீதம் 90,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் குஜராத்திகள்தான் அதிகளவில் உள்ளதாகவும் தெரிகிறது.
அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப்பாதுகாப்பு தரவுகளின்படி, அமெரிக்க நிதியாண்டு 2024-ன் படி (அக்டோபர் 1, 2023 - செப்டம்பர் 30, 2024 வரை) மெக்சிகோ மற்றும் கனடா வழியில் சுமார் 29 லட்சம் பேர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய குற்றத்திற்காக பிடிபட்டிருக்கிறார்கள். இதில், 90,415 பேர் இந்தியர்கள் என அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப்பாதுகாப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், “இந்த இந்தியர்களில், சுமார் 50% பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 10 இந்தியர்கள் வீதம் கைது செய்யப்படுகின்றனர். அதிலும், வடக்கில் கனடாவுக்கான அமெரிக்க எல்லையில் 43,764 பேர் என அதிக அளவிலான எண்ணிக்கையில் கைது செய்யப்படுகிறார்கள்” என்றும் தெரிவிக்கிறது.
2023 ஆம் நிதியாண்டில், சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் எண்ணிக்கை என்பது 96,917 என்பதாகும். 2024 இல் அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் 25,616 இந்தியர்கள் பிடிப்பட்டுள்ளனர். ஆனால், US FY 2023 இல் இந்த எண்ணிக்கை 41,770 ஆக இருந்தது.
இது குறித்து குடியேற்ற நெட்வர்க்கில் உள்ள அதிகாரிகள் கூறுகையில், “இரண்டு முக்கிய காரணங்களால் மக்கள் மெக்சிகோ வழியாக சட்டவிரோதமாக குடியேறுவதை நிறுத்திவிட்டார்கள். ஒன்று, மெக்சிகோவிற்கு செல்லும் முன்பு, துபாய் அல்லது துருக்கியில் சில காலம் தங்கும் நிலை ஏற்படுகிறது. இரண்டாவது அமெரிக்க ஏஜென்சிகள் கடந்த சில ஆண்டுகளாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
குஜராத்திக்களும் மெக்ஸிகோவை விட கனடாவையே அதிகம் தேர்வு செய்யத் தொடங்கியுள்ளனர். ஏனெனில், அந்த வழியில் செல்லும்போது எளிதாக ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்து அமெரிக்காவின் எல்லையை புகுந்துவிட முடிகிறது. ஆனால், சமீபகாலமாக, அமெரிக்க அதிகாரிகள் இந்த எல்லையிலும் கண்காணிப்பை கடுமையாக்கியுள்ளனர். இப்படி குடியேறுபவர்கள் கனடாவுக்கு கனடா விசிட்டர் விசா மூலமாக அனுப்பப்படுகிறார்கள். பிறகு சிறிது காலம் அங்கேயே தங்கியிருந்து மீண்டும் அமெரிக்காவில் நுழைய இதே வழியை பயன்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்துள்ளனர்.