நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட 9 முன்னாள் முதல்வர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.
மூன்று முறை டெல்லி முதல்வராக பதவி வகித்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஷீலா தீட்சித் இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். அதேபோல, 2005 முதல் 2014ஆம் ஆண்டு வரை ஹரியானா மாநில முதல்வர், 4 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பூபேந்தர் சிங் ஹூடா சோனிபட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளார். உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும், 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஹரீஷ் ராவத்தும் தோல்வியில் இருந்து தப்பவில்லை.
நைனிதால் தொகுதியில் போட்டியிட்ட ஹரீஷ் ராவத், 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் அஜய்பாத்திடம் வீழ்ந்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அசோக் சவான் தான் பிறந்து வளர்ந்த நாண்டத் தொகுதியிலேயே தோல்வியை சந்தித்துள்ளார். மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷில்குமார் ஷிண்டே தனது சொந்த தொகுதியான சோலாப்பூரில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
சிக்பள்ளாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி பா.ஜ.க. வேட்பாளரிடம் வீழ்ந்தார். கோட்சே தேச பக்தர் எனக்கூறி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா சிங்கிடம் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் தோல்வியை சந்தித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் செல்வாக்கு உடையவர் எனக் கருதப்பட்டவரும், அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வருமான நபம் துகியும், மேகாலயா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான முகுல் சங்மாவும் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர். இதுதவிர கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான தேவ கவுடா 13,339 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.