கொரோனா காரணமாக இந்தியாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு பெறுகிறது. இந்த ஓர் ஆண்டில் இந்தியாவில் என்னென்ன முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன என்பதை சற்றே ரீவைண்ட் செய்யலாம்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்றுப் பேரரக்கன் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் பரவத் தொடங்கி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தனது தனது மிக மோசமான முகத்தை காட்ட தொடங்கியது.
மார்ச் 11-ஆம் தேதி கொரோனாவை பெருந்தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவிக்க, செய்வதறியாமல் திகைத்த உலக நாடுகள் பலவும் தொடர்ந்து பொதுமுடக்கத்தை அமல்படுத்தின.
மார்ச் 12-ஆம் தேதி இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் 76 வயதான ஆண் ஒருவர் இந்த வைரஸினால் முதன்முதலில் உயிரிழக்க, இந்தியாவிலும் பதற்றம் தொடங்கியது.
மார்ச் 20-ஆம் தேதி நாட்டு மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 22 அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, அதாவது 14 மணி நேரம் மக்கள் ஊரடங்கு எனப்படும் ஜனதா கர்ஃப்யூ அமல்படுத்தப்படுவதாகவும், அந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் தங்களது வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.
அந்த 21 நாள்கள்
திடீரென வீட்டிற்குள் இருக்க சொன்னது பொதுமக்களிடம் சரிவர புரிதலை ஏற்படுத்தவில்லை. அதுவும் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கமான வேலைகளில் பொதுமக்கள் ஈடுபடவே மார்ச் 24-ஆம் தேதி மீண்டும் பொதுமக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 24 ஆம் தேதியில் இருந்து அடுத்த 21 நாள்களுக்கு 130 கோடி மக்கள் வாழக்கூடிய இந்தியா முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார்.
அதாவது, மருத்துவ சேவை உள்ளிட்ட மிக மிக அவசியமான தேவைகளை தவிர பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது. திரையரங்குகள் தொடங்கி ஐடி நிறுவனங்கள் முதல் சிறிய பெட்டிக்கடை வரை அனைத்தும் மூடப்படுவதாக அறிவித்தார்.
அனைத்து மாநில அரசுகளும் காவல்துறையினரை கொண்டு இந்த பொது முடக்கம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்து வார்த்தைகளும் பிரபலமாக தொடங்கிய நாள்கள் அவை.
'கால்'நடை இந்தியா
பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளிலிருந்து தான் பொதுமுடக்கத்தின் மற்றொரு மிக மோசமான பக்கம் தொடங்கியது. அதுதான் நாடு முழுவதிலும் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அடுத்த வேலை உணவிற்கு வழியில்லாமல் தங்களது சொந்த ஊர்களுக்கு நடைபயணம் தொடங்கினர். விமானம், ரயில், பேருந்து, ஆட்டோ என அனைத்து சேவைகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. அதனால், குழந்தைகளை தூக்கிக்கொண்டும் வயதானவர்களும் பெண்களும் என லட்சக்கணக்கான இந்தியர்கள் பலநூறு மைல்களை கால்நடையாகவே நடக்கத் தொடங்கினர்.
இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக நரம்புகள்போல ஓடும் நெடுஞ்சாலைகளில் கடும் வெயிலிலும் மிக பயஙகரமான கொரோனா வைரஸ் அச்சத்திலும் புலம்பெயர் தொழிலாளர்கள் படும் துயரங்களை தொலைக்காட்சி வழியாக பார்த்து சக இந்தியர்களால் உச்சுக் கொட்ட மட்டும்தான் முடிந்தது.
'கை தட்டிய' இந்தியா
மார்ச் 19-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் உள்ள முன்கள பணியாளர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக மக்கள் அனைவரும் 5 நிமிடம் கை தட்டியோ அல்லது மணி அடித்தோ ஒலி எழுப்ப வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுகொண்டிருந்தார்.
மார்ச் 28 ஆம் தேதி முதல் தினம்தோறும் ஆயிரம் பேர் புதிதாக இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட தொடங்கி, இந்த எண்ணிக்கை இரண்டு மடங்கு, மூன்று மடங்கு என தொடர்ந்து அதிகரித்து வந்தது நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
மார்ச் 26 ஆம் தேதி ஏழைகளுக்கு உதவும் வகையில் 1.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்குதல் உள்ளிட்ட உதவித் திட்டங்களை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்க, அடுத்தநாள் அதாவது மார்ச் 27ஆம் தேதி அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான வங்கிக் கடன்களுக்கான வட்டி சலுகையினை ரிசர்வ் வங்கி அறிவித்தது.
மார்ச் 31 ஆம் தேதி டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட, அவர்களில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து இருந்தார்கள் என்பதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது.
நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த பிரதமர் மோடி, ஏப்ரல் 2-ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் இந்த கொரோனா தொடர்பாக காணொலி காட்சி வாயிலாக விரிவான ஆலோசனை நடத்தி, மாநில முதல்வர்களிடமிருந்து தகவல்களை கேட்டுப் பெற்றார்.
'விளக்கேற்றிய' இந்தியா
இதற்கிடையில், ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் நாடு முழுவதிலுமுள்ள 130 கோடி இந்தியர்களும் தங்களது வீடுகளில் விளக்கேற்றி வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்திருந்தார். இதே ஏப்ரல் 5-ம் தேதி இந்தியாவில் இந்த வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 கடந்தது.
பிரதமர் மோடி அறிவித்த முதல் பொது முடக்கம் ஏப்ரல் 14-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதே நாளில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது. இதை அடுத்து பொதுமுடக்கம் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த முதல் பொதுமுடக்க காலத்திலும் பொதுமக்களை பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியாத சூழல்தான் இருந்தது. கடுமையான அபராதங்களும் வழக்குகளும் பொதுமக்களை வீட்டிற்குள் இருக்கச் செய்ய ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் மிக வேகமாக செயல்பட்டது.
அடுத்த ஒரு வாரத்தில், அதாவது ஏப்ரல் 22-ஆம் தேதி பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,000-ஐ கடக்க, அதிலிருந்து சரியாக ஒரு வாரத்தில், அதாவது ஏப்ரல் 29-ஆம் தேதி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000-ஐ கடந்தது. மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் ஒரு நொடி அப்படியே உறைந்துபோன தருணம் இது.
இதனால் மே 1-ஆம் தேதி முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுமக்கள் நீட்டிக்கப்பட்டது. ஆனால் இந்த, முறை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகள் பிரிக்கப்பட்டது. சிறப்பு ரயில் சேவையும் தொடங்கப்பட்டாலும், ஏற்கெனவே பல லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே தங்களது வீடுகளுக்கு சென்றிருந்தனர்.
மே 4-ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறப்பு உள்ளிட்ட சில தளர்வுகள் பச்சை மண்டல பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டது. கொரோனாவை பொருட்படுத்தாமல் குடிமகன்கள், அதாவது குடிப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்க வரிசையில் நிற்க, அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்க பெரும் போராட்டமாக மாறத் தொடங்கியது.
'தற்சார்பு' இந்தியா
மே 12-ஆம் தேதி தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அடுத்த 3 நாள்களுக்கு துறை வாரியாக எவ்வளவு நிதி வழங்கப்படும் என்பதற்கான அறிவிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மே 17-ஆம் தேதி முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும்; மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து உள்ளிட்ட போக்குவரத்துகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதேநேரத்தில், இந்த வைரஸ் உருவான சீனாவை விட அதிக பாதிப்பு இந்தியாவில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மே 25 ஆம் தேதி முதல் உள்ளூர் விமான சேவை கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது. ஜூன் 8 ஆம் தேதி உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவற்றை கட்டுப்பாடுகளுடன் திறந்து கொள்ளும் தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக வழங்கப்பட தொடங்கியது. இந்த தருணத்தில் இந்தியாவில் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2.5 லட்சத்தை கடந்திருந்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7200-ஐ தாண்டியிருந்தது.
அடுத்த நான்கு நாட்களில் 50,000 பேர் புதிதாக இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட ஜூன் 12-ஆம் தேதி உலகிலேயே மிக மோசமாக பாதிப்பிற்கு உள்ளான நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்திற்கு இந்தியா வந்தது.
ஜூன் 27-ஆம் தேதி முதல் தினசரி வைரஸினால் பாதிக்கப் படக்கூடியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்ட தொடங்கியது.
ஜூலை 15-ஆம் தேதி கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணிகள் இந்தியாவில் தொடங்கியது. இதேநேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மிக மோசமான நாடுகளின் இந்தியா 2-வது இடத்திற்கு வந்திருந்தது.
ஜூலை 25-ஆம் தேதி நவம்பர் மாதம் முதல் ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என பிசிசிஐ அறிவிக்க, அது பல்வேறு தரப்பிலும் கடுமையான விமர்சனங்களை எழுப்பியது.
ஆகஸ்ட் 26-ஆம் தேதி சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பு மருந்து பரிசோதனை மனிதர்களிடம் செலுத்தப்பட்டது
ஆகஸ்டு 26-ஆம் தேதி முதல் நான்காம் கட்ட தளர்வுகள் வழங்கப்பட்டு மெட்ரோ நிலையங்கள் கட்டப்பட்டது.
ஆகஸ்ட் 31-ஆம் தேதி இந்திய புள்ளியியல் துறை இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மைனஸ் 23.9 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக அறிவிப்பு வெளியிட, இந்திய பொருளாதாரம் குறித்த கவலை தொற்றியது.
செப்டம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பகுதிநேரமாக பள்ளிகளை திறக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்புகளை அறிவித்தது.
செப்டம்பர் 23-ஆம் தேதி மத்திய ரயில்வே துறையின் இணை அமைச்சராக இருந்த சுரேஷ் அங்கடி கொரோனாவால் உயிரிழந்திருந்தார்.
செப்டம்பர் 30 ஆம் தேதி ஐந்தாம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நீச்சல் குளங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவை திறக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அக்டோபர் மாதம் 28ஆம் தேதி பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. பெருந்தொற்று காலத்தில் தேர்தலை நடத்துவது மிகவும் சவாலானது எனக் கூறிய இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பல மாற்றங்களைக் கொண்டு வந்து, வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்தது. இந்தத் தேர்தலில் நிதீஷ் குமார் - பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியை பிடித்திருந்தது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டிசம்பர் 1-ஆம் தேதி முதல் தலைநகர் டெல்லியை சுற்றி விவசாயிகளின் போராட்டம் தொடங்கியது.
டிசம்பர் 21ஆம் தேதி பிரிட்டனில் இருந்து இந்தியா வருவதற்கு விமான சேவையை மத்திய அரசு ரத்து செய்த நிலையில், 29-ஆம் தேதி பிரிட்டனில் இருந்து வந்திருந்த ஆறு பயணிகளுக்கு உருமாறிய கொரோனா கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.
மீண்டும் டிசம்பர் 30-ஆம் தேதி முதல் பல மாநிலங்களில் இரவுநேர பொதுமக்கள் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட ஜனவரி 16-ஆம் தேதி முதல் முதல்கட்டமாக 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
ஜனவரி 26-ஆம் தேதி விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது.
ஜனவரி 29-ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்.
மார்ச் 1-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள அடுத்தடுத்து பல மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் தடுப்பு ஊசியை எடுத்து வருகின்றனர்.
மிகக் குறைவாக பதிவாகி வந்த வைரஸ் பாதிப்பு, கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நிரஞ்சன்