இந்தியாவில் முதன்முறையாக தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது. ஒரே நாளில் 1,03,558 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மஹாராஷ்ட்ராவில் கொரோனா பாதிப்பு அதிதீவிரம் அடைந்துள்ள நிலையில், 'இந்தியாவில் முதன்முறையாக ஒரே நாளில் 1,03,558 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,24,85,509-லிருந்து 1,25,89,067 ஆக அதிகரித்துள்ளது' என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா முதல் அலையின்போது 2020 செப்.17-ல் அதிகபட்ச ஒரு நாள் பாதிப்பு 98,795 ஆக இருந்ததும், 6 மாதங்களுகுப் பின் கொரோனா 2-வது அலையில் தற்போது கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதும் கவனிக்கத்தக்கது.
பலியானோரின் விவரம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 478 பேர் பலியாகினர். நாட்டில் கொரோனா பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 1,64,623-லிருந்து 1,65,101 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகள்
இந்தியாவில் இதுவரை 7.91 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 16.38 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை 31.86 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை விவரங்கள்
இந்தியாவில் இதுவரை 24.90 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8.93 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
குணமடைந்தோரின் விவரங்கள்
கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 52,847 பேர் குணமடைந்தனர். நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,16,29,289-லிருந்து 1,16,82,136 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,41,830 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் முதலாவது அலை கடந்த ஓராண்டு காலமாக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது, இந்தியாவில் கொரோனா தொற்றின் இராண்டாவது அலை மீண்டும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.