“எங்களை தொந்தரவு செய்வது உங்கள் வேலை இல்லை”-பாஜக எம்.பியை சாடிய விமான பயணிகள்..!

“எங்களை தொந்தரவு செய்வது உங்கள் வேலை இல்லை”-பாஜக எம்.பியை சாடிய விமான பயணிகள்..!
“எங்களை தொந்தரவு செய்வது உங்கள் வேலை இல்லை”-பாஜக எம்.பியை சாடிய விமான பயணிகள்..!
Published on

விமானத்திற்கு தாமதமாக வந்த பாஜக எம்பி பிரக்யா தாக்கூரை சக பயணிகள் சரமாரியாக சாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர் எனக்கூறி சர்ச்சையில் சிக்கியவர் பாஜக எம்பி பிரக்யா தாக்கூர். இதற்காக அவர் மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில் தற்போது புது பிரச்னையில் சிக்கியுள்ளார். கடந்த 21 ஆம் தேதி டெல்லியில் இருந்து போபாலுக்கு செல்ல ஸ்பைஜெட் விமானத்தின் முதல் வரிசையில் உள்ள சீட்டை முன்பதிவு செய்துள்ளார் பிரக்யா. ஆனால் அவர் விமானத்திற்கு வரும்போது சக்கர நாற்காலியில் வந்துள்ளார்.

இதனால் முதல் வரிசையில் இடம் ஒதுக்க முடியாது எனவும் பாதுகாப்பு காரணங்களுக்காக் இரண்டாவது வரிசையில் அமருமாறும் விமான ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு பிரக்யா தாக்கூர் மறுப்பு தெரிவிக்கவே விமானம் புறப்பட காலதாமதம் ஆனது.

இதனால் ஆத்திமடைந்த சக பயணிகள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ஒரு பயணி, பிரக்யாவை கீழே இறக்கி விடுமாறு விமான ஊழியர்களிடம் வலியுறுத்தினார். மேலும் பிரக்யாவை பார்த்து, “நீங்கள் மக்களின் பிரதிநிதி. எங்களை தொந்தரவு செய்வது உங்கள் வேலையல்ல. தயவு செய்து அடுத்த விமானத்தில் நீங்கள் வாருங்கள்” எனத் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த பிரக்யா “முதல் வகுப்பு வசதிகள் கூட இல்லாத இந்த விமானத்தில் நான் பயணம் செய்கிறேன் என்றால், அதற்கு ஏதோ காரணம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்” எனக் கூறினார். அப்போது “முதல் வகுப்பு என்பது உங்களின் உரிமையல்ல. உங்களால் ஒருவர் பாதிக்கப்பட்டால் கூட அதற்கு தார்மீக ரீதியில் பொறுப்பேற்றுக் கொண்டு செயல்படும் பண்பை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரு தலைவரை போன்று நடந்து கொள்ளுங்கள். இந்த விமானத்தில் இருக்கும் 50 பேரை இப்படி சிரமத்திற்கு ஆளாக்குகிறீர்கள். இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

அதற்கு ”நான் சரியாக தான் பேசுகிறேன்” என்ற பிரக்யா சிங் தாக்கூர் விமான ஊழியர்கள் ஒதுக்கிய இருக்கையில் அமர்ந்து கொண்டு பயணம் செய்தார். இதுகுறித்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து விமானத்தின் நிறுவனம் தரப்பில் கேட்கும்போது, “பிரக்யா தாக்கூர் முன்பதிவு செய்யும்போது சக்கர நாற்காலி குறித்து தெரிவிக்கவில்லை.அதனால் தான் இத்தகைய குழப்பம்” எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் தெரிவித்துளள பிரக்யா தாக்கூர், “ எனக்கு தண்டுவட பிரச்னை இருக்கிறது. அதனால் கால் வைக்கும் அளவிற்கு இடம் இருக்கும், 1A இருக்கை கேட்டிருந்தேன். அதற்காக கூடுதலாகவும் பணம் செலுத்தியிருந்தேன். நான் வீல்சேரில் தான் அங்கு சென்றேன். ஆனால் விமான பயணிகள் என்னை அங்கு இருக்கக் கூடாது என சொன்னார்கள். மேலும் இரு நபர்கள் கூறும்போது, அது அவசரகால இருக்கை என கூறினார்கள். ஆனால் அந்த இருக்கையில் அப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

உண்மையில் அது விதி என்றால், ரூல் புத்தகத்தை கொடுங்கள் எனக் கேட்டேன். ஆனால் அவர்களிடம் ரூல் புக் இல்லை. சிலர் என்னிடம் வந்து எதற்காக விமானம் தாமதமாகிறது எனக் கேட்டனர். சில பயணிகள் நான் விஐபி நிலையை காட்டுகிறேன் என நினைத்துக் கொண்டனர். ஆனால் நான் சாதரண இருக்கையிலேயே பயணித்தேன். நான் வலியுடனே பயணித்தேன். பின்னர் போபால் விமான இயக்குநரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தேன்” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com