வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் நிரவ் மோடி தனது தரப்பு விளக்கம் விதத்தில் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூலம் கடன் பெற்றுக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நிரவ் மோடி அமலாக்கத்துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மின்னஞ்சலில் அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் எனது விதியை முடிவு செய்துவிட்டே, என்னை இந்தியாவுக்கு அழைக்கிறீர்கள் என தெரிவித்துள்ளார்.
நிரவ் மோடி வெளிநாட்டில் இருப்பதால், அவரிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வழக்கில் விசாரணை நடத்த முடியாமல் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை திணறி வருகிறது. இந்நிலையில் அமலாக்கத்துறை சார்பில் நிரவ் மோடிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு மின்னஞ்சலில் கடிதம் அனுப்பப்பட்டது.
அதற்கு நிரவ் மோடி இன்று பதில் அனுப்பியுள்ளார். அதில் “ எனது பாஸ்போர்ட்டை ரத்து செய்து விட்டு, விசாரணைக்கு இந்தியா வா என்கிறீர்கள். ஏன் என்னுடைய பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது என கேட்டு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதிய அடுத்த நிமிடம், எனது பாஸ்போர்ட் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இப்படி மின்னல் வேகத்தில் செயல்படுவதை பார்க்கும் போது எனக்கு சில விஷயங்கள் புரிகிறது. எனது விதியை நீங்கள் தீர்மானித்து விட்டீர்கள். என்ன செய்ய வேண்டுமென்பது முன்னரே முடிவாகியிருக்கிறது. என்னுடைய எந்தப் பதிலையும் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை தெரிந்து கொண்டேன்” என்று கூறியுள்ளார்.