“என்ன இது, ஆதாரம் எங்கே ??” - உச்சநீதிமன்றம் காட்டம்

“என்ன இது, ஆதாரம் எங்கே ??” - உச்சநீதிமன்றம் காட்டம்
“என்ன இது, ஆதாரம் எங்கே ??” - உச்சநீதிமன்றம் காட்டம்
Published on

சிபிஐ தரப்பு கூறும் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் ஆதாரம் எங்கே ? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய் காட்டமாக கேள்வி எழுப்பினார்.

மேற்கு வங்கத்தில் கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க நேற்று சென்ற சிபிஐ சென்றபோது, அவர்களை காவல்துறையினர் கைது தடுத்துநிறுத்தினர். பின்னர் அங்கிருந்து காவல்நிலையம் அழைத்துச்சென்று, அதன்பின்னர் விடுவித்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. காவல்துறையினருக்கு ஆதரவாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி களமிறங்கினார். சிபிஐ-யை எதிர்த்து அவர் மேற்கொண்டு வரும் தர்ணா போராட்டத்தில், சிபிஐ-யால் குற்றஞ்சாட்டப்பட்ட கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரும் பங்கேற்றார்.

இறுதியில் இந்த விவகாரம் உச்சநீதிமன்ற வாசலில் போய் நின்றது. சிபிஐ தரப்பு இரண்டு மனுக்களை தாக்கல் செய்தனர். அதில் கொல்கத்தா காவல் ஆணையர் நிதி நிறுவன முறைகேடு வழக்கில் ஒத்துழைக்க உத்தரவிட வேண்டும், சிபிஐ அதிகாரிகளை தடுத்த காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

சிபிஐ தரப்பு வழக்கறிஞர் மேதா வாதாடிய போது, “கொல்கத்தாவில் சிபிஐ அதிகாரிகளுக்கு என்ன நேர்ந்தது தெரியுமா? அவர்கள் அங்கு தர்ம சங்கடமான நிலைக்கு ஆளாகினார்கள். சிபிஐ அதிகாரிகள் பிணைக்கைதிகளாக பார்க் தெரு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டனர். சிபிஐ உச்சநீதிமன்றத்திற்கு செல்வோம் என்ற பின்னரே காவல்துறையினர் அவர்களை விடுவித்தனர். சிபிஐ இணை இயக்குநரின் குடும்பத்தையும் பிணைக்கைதியாக்கினர். சிபிஐ இயக்குநர் பேசிய தொலைபேசி உரையாடல் நடத்திய பின்னரே அவர்களை விடுவித்தனர். காவல் ஆணையரான ராஜீவ் குமாரே, திரிணாமுல் காங்கிர நடத்திய தர்ணாவில் பங்கேற்றார். இதிலிருந்தே அவர்கள் கூட்டாக சேர்ந்து ஆதாரத்தை அழிக்க முயன்றது தெரியவருகிறது. சாரதா சிட் பண்ட் வழக்கில் சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கொல்கத்தா காவல்துறை முற்றிலும் துளிகூட ஒத்துழைக்காமல் இருந்துள்ளனர்” என்றார்.

இதையடுத்து பேசிய தலைமை நீதிபதி கோகாய், “மேதா முதலில் நாங்கள் உங்கள் மனுவை தான் விசாரிக்கிறோம். ஆனால் நீங்கள் காவல்துறையினர் ஆதாரத்தை அழிக்க முயன்றனர் என்பதை நிரூபிக்க எந்த ஆவணத்தையும் சமர்பிக்கவில்லை. காவல் ஆணையர் ஆதாரத்தை அழிக்க முயன்றார் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சிறிய ஆதாரத்தை நீங்கள் தாக்கல் செய்திருந்தால்கூட, ஆணையர் வருத்தப்படும் அளவிற்கு அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருப்போம்” என்றார்.

அதற்கு விளக்கமளித்து பேசிய மேதா, “இந்த விவகாரத்தை நாங்கள் இன்று தான் பதிவு செய்கிறோம். நேற்றிரவு தான் மனுவே தயார் செய்தோம். இதனை நீங்கள் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என்றார். இதனால் கடுப்பான நீதிபதி, “என்ன இது.. நீங்கள் நீதிமன்ற அறைக்கு வருவதற்கு முன்புவரை ஆதாரங்கள் இருப்பதாக கூறினீர்கள். ஆனால் எதுவும் இல்லை. நாங்கள் வழக்கை நாளை காலை 10.30 மணிக்கு விசாரிக்கிறோம்” என்றார். அத்துடன் “உங்களுக்கு 24 மணி நேரம் தருகிறோம். அதற்குள், சிபிஐ தரப்பு வழக்கறிஞரோ அல்லது ஏதேனும் கட்சி சார்பிலோ, மேற்கு வங்க அரசு மற்றும் காவல்துறை ஆதாரங்களை அழிக்க முயன்றனர் என்பதற்கான சாட்சியங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்” என்று உத்தரவிட்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com