இந்தியா பாகிஸ்தான் பதட்டத்தை வைத்து உணர்ச்சிகளை கிளறிவிடாதீர்கள் என சமூக வலைதளவாசிகளுக்கு ஐஏஎஃப் விமானியின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புட்காம் பகுதியில் கடந்த புதன்கிழமை எம்.ஐ.–17 ரக ஹெலிகாப்டர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தது. அப்போது அந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகி, கிழே விழுந்து நொறுங்கியது. அதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த விமானப்படை வீரர்கள் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த வீரர்களுள் நினட் மண்டவ்கானும் ஒருவர்.
இறுதி சடங்கில் பேசிய அவரது மனைவி விஜேதா, “வெறும் கோஷங்களை எழுப்பாதீர்கள். ‘ஜிந்தாபாத் அல்லது முர்தாபாத்’ இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உண்மையில் நீங்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தால் பாதுகாப்பு படையில் சேர்ந்து நாட்டிற்கு சேவை செய்யுங்கள்.
அல்லது உங்கள் குடும்பத்தில் யாரையேனும் பாதுகாப்பு படையில் சேர்க்க ஊக்குவியுங்கள். அதுவும் செய்ய முடியவில்லை எனில், நாட்டிற்கு சின்ன சின்ன உதவிகள் செய்யுங்கள். அதாவது, சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்ளுங்கள். கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டாதீர்கள். பொது இடங்களில் சிறுநீர் கழிக்காதீர்கள். பெண்களை துன்புறுத்தாதீர்கள். வகுப்புவாத வெறுப்பை பரப்புவதை நிறுத்துங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே இந்தியா பாகிஸ்தான் பிரச்னை குறித்து வலைதளங்களில் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் உணர்ச்சிமிக்க கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா பாகிஸ்தான் பதட்டத்தை வைத்து உணர்ச்சிகளை கிளறிவிடாதீர்கள் என சமூக வலைதளவாசிகளுக்கு ஐஏஎஃப் விமானியின் மனைவி விஜேதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நிறைய நடக்கிறது. ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட்டாலும் சில நேரங்களில் அவ்வாறு இல்லை. நமக்கு போர் வேண்டாம். போரினால் ஏற்படும் இழப்புகள் குறித்து உங்களுக்கு தெரியாது. நாம் மேலும் நிறைய நினட் மண்டவ்கானை இழக்க வேண்டாம். வலைதளங்களில் போரிட்டு கொள்வதை நிறுத்துங்கள். உங்களுக்கு போர் வேண்டுமானால் நேரடியாக செல்லுங்கள்” எனத் தெரிவித்தார்.