’சானிடரி நாப்கின்களை அரசு ரூ.20-30க்கு வழங்குமா?’ என்ற பள்ளி மாணவியின் கேள்விக்கு, ’அரசு குடும்ப கட்டுப்பாடு முறைகள் மற்றும் காண்டமும் சேர்த்து வழங்கவேண்டுமா?’ என பீகாரில் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி இறுமாப்பாக பதிலளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.
பீகாரின் பாட்னாவில் 'Sashakt Beti, Samriddh Bihar' (அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார்) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. யுனிசெஃப் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் கழகத்திற்கு தலைமை தாங்கும் ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் பம்ராவிடம் மாணவிகள் சில கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு அவரும் வெளிப்படையாக பதிலளித்துள்ளார். அப்போது அவரிடம் மாணவி ஒருவர், ’சானிடரி நாப்கின்களை அரசு ரூ.20-30க்கு வழங்குமா?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பம்ரா, ‘நாளை அரசை ஜீன்ஸ் கொடுக்கச்சொல்வீர்கள். பின்னர் ஏன் அழகான ஷூக்களை கொடுக்கக்கூடாது என்பீர்கள். மேலும், அரசு உங்களுக்கு குடும்ப கட்டுப்பாடு வழிமுறைகள் மற்றும் காண்டமும் சேர்த்து கொடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பீர்கள்’’ என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு எதிரிலிருந்த மாணவிகள், மக்களின் வாக்குகளே அரசை உருவாக்குகிறது என்று கூறினர். அதற்கு அதிகாரி பம்ரா, ’’இது முட்டாள்த்தனத்தின் உச்சகட்டம். பின்னர் வாக்களிக்காதீர்கள். பாகிஸ்தான் போன்று இருங்கள். நீங்கள் எதற்காக வாக்களிக்கிறீர்கள் பணத்திற்காகவா? அல்லது சேவைகளுக்காகவா?’’ என்று கேள்வி எழுப்பினார்.
அதாவது அதிகாரி மாணவிகளின் பதில்களிலிருந்து அவர்களுக்கு பாடம் கற்பிக்க விரும்பினார். ’’ஏன் அரசிடமிருந்து எதையும் எடுத்துக்கொள்ள விரும்புகிறீர்கள்? இதுபோன்ற சிந்தனை தவறானது. நீங்களே உங்களுக்காக செய்யுங்கள்’’ என்று கூறினார். இந்த காரசார விவாதம் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவிகள் முன்பு நடைபெற்றது.
தொடர்ந்து மாணவிகள், தங்களுடைய பள்ளியில் கழிவறை சுவர்கள் உடைந்திருப்பதாகவும், அதன்வழியாக மாணவர்கள் அடிக்கடி உள்ளே வந்துபோவதாகவும் தெரிவித்தனர். அதற்கு அதிகாரி, ’’உங்கள் வீட்டில் தனித்தனி கழிவறைகள் இருக்கிறதா? நீங்கள் வெவ்வேறு இடங்களில் நிறைய விஷயங்களைக் கேட்டால், அது எப்படி வேலை செய்யும்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ‘’பாகிஸ்தானாக இருங்கள்’’ என்ற பதிலுக்கு, மாணவி ஒருவர், ‘’நான் ஒரு இந்தியன். நான் எதற்கு பாகிஸ்தான் செல்லவேண்டும்?’’ என்று பதில் கேள்வி எழுப்பினார்.
அங்கிருந்த மாணவிகள் பின்னர் ஏன் அரசு சலுகைகள் இருக்கின்றன? என கேள்வி எழுப்பினர். அதன்பிறகு பம்ரா மீண்டும் பதில் வகுப்பு எடுத்தார். அதில், ’’சிந்தனையை மாற்றவேண்டும். எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும். இந்த முடிவை நீங்கள்தான் எடுக்கவேண்டும். அதை அரசு உங்களுக்காக எடுக்கமுடியாது. நீங்கள் இப்போது அமர்ந்திருக்கும் இடத்தில் இருக்கவேண்டுமா? அல்லது நான் இருக்கும் இடத்திலா?’’ என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிகழ்ச்சி குறித்த தவறான செய்திகள் வெளியானதை அடுத்து, ’’அது பொய்யான தகவல்; தீங்கிழைக்கும் விதமாக மாற்றப்பட்டுள்ளது’’ என்று பம்ரா அதுகுறித்து இன்று விளக்கமளித்துள்ளார். மேலும், நான் பெண்களின் உரிமை மற்றும் அதிகாரத்திற்காக சத்தமில்லாமல் போராடும் நபர் நான் என்பதை அனைவரும் அறிவர். என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு முறையும் எனக்கு எதிரான தவறான தகவல்களை பரப்பி தோற்றுப்போன சிலர் இதுபோன்ற கீழ்த்தரமான முயற்சிகளில் இறங்கியுள்ளனர்’’ என்று கூறியுள்ளார்.