மேற்கு வங்க பாரதிய ஜனதா இளைஞர் அணி அமைப்பாளர் பிரியங்கா சர்மாவை கைது செய்தது ஒருதலைபட்சமான நடவடிக்கை போல் தோன்றுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சஞ்சீவ் கன்னா அடங்கிய அமர்வு இக்கருத்தை கூறியிருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அவமதிக்கும் வகையில் அவர் முகத்தை உருமாற்றி வெளியிட்டதாக கூறி பிரியங்கா ஷர்மாவை அம்மாநில காவல் துறையினர் கைது செய்திருந்தனர். இதையடுத்து பிரியங்கா ஷர்மா தரப்பில் தொடரப்பட்ட மனுவையடுத்து அவருக்கு பிணையில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
ஆனால் குறிப்பிட்டபடி பிரியங்கா ஷர்மா விடுவிக்கப்படவில்லை எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடப்பட்டது. இதையடுத்து பிரியங்கா ஷர்மாவை உடனடியாக மேற்கு வங்க அரசு விடுவிக்க வேண்டும் என்றும் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
மேலும் பிரியங்கா ஷர்மா கைது செய்யப்பட்டது ஒரு தலைப்பட்சமானது என்று முதல் நோக்கில் தெரிய வருவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே மம்தாவிடம் மன்னிப்பு கேட்குமாறு நீதிபதிகள் பிரியங்கா சர்மாவுக்கு அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து பிரியங்கா ஷர்மா பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பிரயங்கா சர்மா, இவ்விவகாரத்தில் தான் மேற்கு வங்க முதல்வரிடம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும் தொடர்ந்து போராடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
“சிறையில் நான் மிகவும் துன்புறுத்தப்பட்டேன். சிறை கண்காணிப்பாளர்கள் என்னிடம் மிக மோசமாக நடந்து கொண்டனர். எனக்கு ஜாமின் கிடைக்கும் வரை என்னை யாரிடமும் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. 5 நாட்களாக நான் யாரிடமும் எதுவும் பேசவில்லை. சிறைக்குள் தண்ணீர் கஷ்டம் இருக்கிறது. நாம் கிளின் இந்தியா குறித்து பேசுகிறோம். ஆனால், சிறைக்குள் சுத்தம் என்பதே கிடையாது.
நான் மம்தாவிடம் மன்னிப்பு கேட்கப்போவது கிடையாது. நான் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு எந்த ஒரு தவறும் செய்யவில்லை. அந்த மார்பிங் செய்த புகைப்படத்தை பகிர்ந்த மற்றவர்களை கைது செய்யாமல் என்னை மட்டும் கைது செய்தது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.