பெங்களூரில், சொமாட்டோ டெலிவரி செய்த இளைஞர் தன்னுடைய மூக்கை உடைத்து விட்டதாக பெண் ஒருவர் இன்ஸ்டாவில் வழியும் ரத்தத்துடன் வீடியோ பதிவிட்டது பரபரப்பை உருவாக்கியது, ஆனால் அப்பெண் தன்னை செருப்பால் அடிக்கவந்தார், அதனை தடுக்க முயன்போதுதான் அவருக்கு காயம் ஏற்பட்டது என அந்த டெலிவரி இளைஞன் விளக்கம் அளித்துள்ளார்.
ஹிட்டேஷா சந்திரனே என்ற பெண் பெங்களூருவில் அழகு நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். அவர் மார்ச் 9ம் தேதி சொமாட்டாவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் உணவு வருவதற்கு தாமதமானதாக தெரிகிறது. இதனால் ஆர்டரை ரத்து செய்யுமாறு சொமாட்டோ கஸ்டமர் கேரிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அந்த நேரத்தில் காமராஜ் என்ற உணவு டெலிவரி பையன் வீட்டு வாசலுக்கு வந்துள்ளார். அப்போது காமராஜ்க்கும், ஹிட்டேஷாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள ஹிட்டேஷா, “உணவு தாமதம் ஆனதும் மீண்டும் எடுத்துச் செல்லுமாறு கூறினேன். அவர் முடியாது என்று என்னைப் பார்த்து கோபமாக கத்தத் தொடங்கினார். அத்துமீறி என் வீட்டுக்குள் நுழைந்தார். என் பாதுகாப்புக்காக செருப்பை கையில் எடுத்தேன். அவர் என் முகத்தில் குத்தினார்”என தெரிவித்தார்.
இருதரப்பு புகார்களையும் ஏற்றுக்கொண்டுள்ள சொமாட்டோ இது குறித்து போலீசார் உதவியுடன் விரிவாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது. போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள காமராஜை, சொமாட்டோ நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.
இது குறித்து தெரிவித்த காமராஜ், “ தாமதமானதால் உணவை திரும்ப எடுத்து செல்லுமாறு ஹிட்டேஷா கூறினார், நானும் எடுத்து செல்ல தயாராக இருந்தேன். ஆனால் என்னை மிகக்கடுமையாக திட்டிய அவர், திடீரென என்னை செருப்பால் தாக்க முயற்சித்தார். நான் தற்காப்புக்காக தடுத்தேன். அவர் அணிந்திருந்த மூக்குத்தி குத்தி இரத்தம் வந்தது. நான் அவரை அடிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.