மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் மூச்சுத் திணறல் இருப்பதாக உணர்ந்ததால், மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக தினேஷ் திரிவேதி தெரிவித்தார்.
இன்று மாநிலங்களவையில் உரையாற்றிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி தினேஷ் திரிவேதி, தன்னை மாநிலங்களவைக்கு அனுப்பியதற்காக தனது கட்சிக்கு நன்றியுள்ளவனாக இருப்பதாகவும், ஆனால் மேற்கு வங்காளத்தில் நடக்கும் வன்முறையைத் தடுக்க எதையும் செய்ய முடியாததால் மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் கூறினார். "இங்கே உட்கார்ந்து எதையும் செய்ய முடியாவிட்டால், நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று என் ஆத்மா என்னிடம் கூறுகிறது. நான் தொடர்ந்து மேற்கு வங்க மக்களுக்காக பணியாற்றுவேன் ”என்றார்
மேலும், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது நாட்டை திறம்பட வழிநடத்திய பிரதமர் நரேந்திர மோடியையும் திரிவேதி பாராட்டினார். இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சி தலைவர் கைலாஷ் விஜயவர்கியா தனக்கு திரிவேதியுடன் நல்லுறவு உள்ளது என்றும், அவர் டி.எம்.சி யிலிருந்து விலகுவது நல்லது என்றும் கூறினார். திரிவேதி பாஜகவில் சேர விரும்பினால் அவரை மகிழ்ச்சியுடன் கட்சி வரவேற்கும் என்று கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸில் நீடிப்பது பற்றி திரிவேதி எதுவும் கூறவில்லை என்றாலும், அவர் விரைவில் பா.ஜ.க.வில் சேரக்கூடும் என்ற ஊகங்கள் பரவி வருகின்றன. இன்னும் சில மாதங்களில் மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், கடந்த இரண்டு மாதங்களில், திரிணாமுல் காங்கிரஸிலிருந்து பல அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் வெளியேறி பாஜகவில் இணைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.