‘ஆபாசத்தை பரப்பாதீர்கள்’ : ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமீனை நிராகரித்த உச்சநீதிமன்றம்

‘ஆபாசத்தை பரப்பாதீர்கள்’ : ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமீனை நிராகரித்த உச்சநீதிமன்றம்
‘ஆபாசத்தை பரப்பாதீர்கள்’ : ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமீனை நிராகரித்த உச்சநீதிமன்றம்
Published on

தனது அரைநிர்வாண உடலில் தன்னுடைய குழந்தைகளை கொண்டு ஓவியம் வரையசொல்லி இணையத்தில் பதிவிட்ட கேரளாவை சேர்ந்த ரெஹானா பாத்திமாவின் செயல் பெரும் பரபரப்பை உருவாக்கியது. எனவே இவர்மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதற்காக இவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை ” நீங்கள் செய்தது ஆபாசத்தை பரப்பும் செயல்” என்று கூறி நிராகரித்துள்ளது உச்சநீதிமன்றம்.

கடந்த ஜூன் மாதம் ரெஹானா பாத்திமா , தனது 14 வயது மகன் மற்றும் 8 வயது மகளை  வைத்து  தனது  அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்து, ‘உடல் மற்றும் அரசியல்’ என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட்டார். முகநூலில் வீடியோவையும், புகைப்படங்களையும பதிவிட்டு, சர்ச்சைக்குரிய வகையில் ஆண், பெண் உடல் குறித்த கருத்துகளையும் அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோ காரணமாக பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. மேலும் மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையமும் இப்பிரச்சினையை  கையில் எடுத்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து,ரெஹானா பாத்திமா மீது போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம், சிறார் நீதிச்சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ரெஹானா பாத்திமா  தாக்கல் செய்திருந்த மனுவைக் கடந்த மாதம் 14-ம் தேதி கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாத்திமா தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நபர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுபோன்ற செயல்பாடுகளிலிருந்து வளரும் குழந்தைகளுக்கு என்ன நன்மை கிடைக்கும் என கேள்வி எழுப்பினர். இது ஆபாசத்தை பரப்பும் செயல். நீங்கள் இதையெல்லாம் ஏன் செய்கிறீர்கள்? நீங்கள் ஒரு சமூக ஆர்வலராக இருக்கலாம், ஆனால் இது என்ன வகையான முட்டாள்தனம்? ஆபாசத்தையே நீங்கள் பரப்புகிறீர்கள். இது சமூகத்தில் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்தனர். இந்த மனுவின் அனைத்து அம்சங்களையும் உயர் நீதிமன்றம் விரிவாகப் பரிசீலித்துவிட்டது. ஆதலால், மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்” என்று தெரிவித்தனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com