" நாங்கள் வேலையை செய்தோம். ராயல்டி என்பதெல்லாம் தெரியாது " - பாடகி ஆஷா போஸ்லே

" நாங்கள் வேலையை செய்தோம். ராயல்டி என்பதெல்லாம் தெரியாது " - பாடகி ஆஷா போஸ்லே
" நாங்கள் வேலையை செய்தோம். ராயல்டி என்பதெல்லாம் தெரியாது " - பாடகி ஆஷா போஸ்லே
Published on

பிரபல பாடகர் ஆஷா போஸ்லே, ஆன்லைன் பாடல் போட்டியை அறிவித்திருந்தார். அதில் வெற்றிபெற்ற ஐந்து போட்டியாளர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் பரிசாக வழங்கியுள்ளார். இதுபற்றி பேட்டி அளித்துள்ள அவர், "யாரும் வெறுங்கையுடன் வீட்டுக்குச் செல்லக்கூடாது" என்று கனிவுடன் குறிப்பிட்டுள்ளார்.

"நான் ஸ்டுடியோவில் பதிவுசெய்தாலும்கூட, அவர்கள் எல்லா கருவிகளையும் கொண்டு என்னைப் பாடச் சொல்கிறார்கள். எனது மூலக்குரலை மட்டுமே இசைக்குமாறு அப்போது அவர்களிடம் சொல்வேன். இயந்திரங்கள் ஒரு குரலை சரிசெய்ய முடியும், ஆனால் அவை உணர்ச்சியைக் கொடுக்கமுடியுமா?" என்று கேட்கிறார் ஆஷா போஸ்லே.

ஆன்லைன் பாடல் போட்டியில் பங்கேற்ற இளம் பாடகர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கினார் ஆஷா போஸ்லே. "அந்த நாட்களில் நாங்கள் உணர்ச்சிவசப்படுகிறவர்களாக இருந்தோம். நாங்கள் வேலையை மட்டும் செய்தோம். ராயல்டி என்றால் என்னவென்றே தெரியாது. தொழிலதிபர்களை நாங்கள் பயன்படுத்திக்கொண்டோம். ஆனால் அவர்கள் எங்கள் பணத்தைச் சாப்பிட்டார்கள் என்பது பிறகுதான் தெரிந்தது" என்று அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் ஆஷா போஸ்லே.

"பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்ற எவரும் எந்த வகையான பாடலையும் பாடமுடியும். ஆரம்பகாலங்களில் பாடல் பதிவின்போது ஹீரோயின்களும் எங்களுடன் இருப்பார்கள். அவர்கள் எப்படி படத்தில் தோன்றுவார்கள் என்பதை அறிந்து, அவர்களுடைய இமேஜூக்கு ஏற்ப குரலை மெருகேற்றிக்கொள்வோம் " என்று கூறும் அவர், சமீபத்தில் மறைந்த பாடகர் எஸ்பிபியுடன் இணைந்து 1980 முதல் 1990 வரை பல பாடல்களைப் பாடியுள்ளார். 1993இல் வெளியான கார்திஸ் படத்தில் அவருடன் சேர்ந்து டூயட் பாடியுள்ளார் ஆஷா போஸ்லே.

"நான் ஹிந்தி, வங்காளம் மற்றும் தமிழில் நிறைய பாடல்களைப் பாடியிருக்கிறேன். எப்போது தமிழில் பாடினாலும், ஏதாவது பாடலில் தடுமாற்றம் ஏற்பட்டால் எஸ்பிபி ஆர்வத்துடன் விளக்குவார். அவர் ஒரு சிறந்த மனிதர். சக கலைஞர்களை எப்போதும் அவர் காயப்படுத்தமாட்டார்" என்று நெகிழ்வுடன் நினைவுகூர்ந்துள்ளார் ஆஷா போஸ்லே.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com