உச்சநீதிமன்ற தீர்ப்பை தந்திரி மதிக்காவிட்டால் அவர் ராஜினாமா செய்துவிட்டு செல்லலாம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலப் பூஜை நிறைவடைந்து மகர பூஜைக்காக நடை டிசம்பர் 30-ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. வரும் ஜனவரி 14-ம் தேதி வரை மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில் சபரிமலைக்கு வந்த இரண்டு பெண்கள் சில நாள்களுக்கு முன்பு அதிகாலையில் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ததால், கோயில் நடை அடைக்கப்பட்டது. சன்னிதானத்தின் நடை திடீரென அடைக்கப்பட்டு, பெண்கள் தரிசனம் செய்ததால் தந்திரியின் பரிகார பூஜை செய்தார். இது குறித்து பலத்த சர்ச்சை எழுந்தது.
இது குறித்து இன்று பேசிய முதல்வர் பினராயி விஜயன் " சபரிமலை தந்திரியின் நடவடிக்கை வினோதமாக இருக்கிறது. தந்திரியும், தேவஸம் போர்டு ஆகியோரின் வாதங்களை கேட்ட பின்புதான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு குறித்து எதிர்மறையான கருத்துகளை தெரிவிக்க தந்திரிக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. ஆனால் நீதிமன்றத்தின் ஆணையை பின்பற்றுவது அதனை மதிப்பது தந்திரியின் கடமை. அப்படி அவரால் முடியாதென்றால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும். அவருக்கு வேறு வழியில்லை. மேலும் தேவஸம் போர்டு இது குறித்து ஆராய்ந்து தந்திரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
பினராயி விஜயனின் இந்தக் கருத்துக்கு கேரள சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் காங்கிரஸை கட்சியின் ரமேஷ் சென்னிதாலா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் "சபரிமலை தந்திரியை தான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மிரட்டுவது போல மிரட்டுகிறார் பினராயி விஜயன். தந்திரியின் நடவடிக்கையை பக்தர்கள் ஆதரிக்கிறார்கள். சபரிமலையில் நுழைந்துவிட்டால் மட்டும் பாலின பாகுபாடு அகற்றப்பட்டுவிடும் என நம்பக் கூடாது" என தெரிவித்துள்ளார்.