ராகுல் காந்தியுடனான சந்திப்பு ஆக்கப் பூர்வமாகவும், உற்சாகம் அளிக்கும் வகையிலும் இருந்ததாக பா.ஜ.க எம்பி சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் பீகார் மாநிலம் பாட்னா தொகுதி பா.ஜ.க எம்பியுமான சத்ருகன் சின்ஹா பிரதமர் மோடியையும், கட்சி தலைமையையும் பலமுறை தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
தொடர்ந்து பாஜக தலைமையை விமர்சித்து வரும் அவரை கழற்றிவிட அந்தக் கட்சி முடிவு செய்ததாக தெரிகிறது. இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் அவரது பாட்னா தொகுதியில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை களமிறக்க பாஜக திட்டமிட்டது. அதன்படி பீகார் வேட்பாளர் பட்டியலை பாஜக கூட்டணி வெளியிட்ட போது அதில் சத்ருகன் சின்ஹாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் தொகுதி ரவிசங்கர் பிரசாத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரவிசங்கர் பிரசாத், இப்போது பீகார் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார்.
இதனிடையே மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்திலும் சத்ருகன் சின்ஹா பங்கேற்றார். சமீபத்தில், ‘மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கான சரியான நேரம் வந்தாகி விட்டது; புதிய தலைமை வரவேண்டும் என்று நினைக்கவில்லையா?’ எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
கட்சியில் எம்.பி சீட் வழங்கப்படாததால் சத்ருகன் சின்ஹா விரைவில் காங்கிரஸில் இணைவார் என்று செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பாஜக எம்.பி சத்ருகன் சின்ஹா சந்தித்து பேசினார்.
இதையடுத்து செய்தியாளருக்குப் பேட்டியளித்த அவர்,“ராகுலுடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது. உற்சாகம் அளிக்கும் வகையில் அவர் என்னிடம் பேசினார். பாஜகவின் கண்ணியத்தை காப்பாற்றியும், அதேநேரம் எனது கருத்துக்களை பல விஷயங்களில் தெளிவாக கூறியிருந்தேன். அதனை ராகுல் பாராட்டினார்.
அவர் என்னை விட வயதில் இளையவர். இன்று அவர் நாட்டின் மிகவும் பிரபலமான தலைவராக இருக்கிறார். நான் நேரு - காந்தி குடும்பத்தின் ஆதரவாளர். அவர்கள் நாட்டை கட்டமைத்தவர்கள் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
பட்னா சாகிப் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக சத்ருகன் சின்ஹா போட்டியிடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.