தெலங்கானாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் கிடங்குகளில் எரிபொருள் பற்றாக்குறையால் இத்தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.
பல எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல், டீசலுக்காக 2 கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தலைநகர் ஹைதராபாத்தில் 40 சதவீத எரிபொருள் நிலையங்களில் ‘ஸ்டாக் இல்லை’ என்ற பதாகையே தொங்கவிடப்பட்டுள்ளன.
இதே போல கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கடந்த 2 நாட்களாக டீசல் தட்டுப்பாடு நிலவுவதால், அரசு பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டீசல் மொத்த கொள்முதல் விலை அதிகரிப்பால், அரசு பேருந்து பணிமனைகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் டீசல் இருப்பில்லை என்று கூறப்படுகிறது.
அதே சமயம் தனியார் பெட்ரோல் நிலையங்களிலும் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அம்மாநில பேருந்து போக்குவரத்தில்பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதே நிலை நீடித்தால், அரசுப் பேருந்தை இயக்குவதில் கடும் சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.