2019 ஆம் ஆண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அடால்ஃப் ஹிட்லர் போன்று நாட்டை ஆட்சி செய்வார்கள் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. இதனால் தேசிய கட்சிகள் கூட்டணிகள் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் இணைந்து கூட்டணியை அறிவித்துள்ளனர். இதனால் அந்த மாநிலத்தின் 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பேரேடு மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளில் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், 2019 ஆம் ஆண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அடால்ஃப் ஹிட்லர் போன்று நாட்டை ஆட்சி செய்வார்கள் எனத் தெரிவித்தார்.
மேலும் மோடி, அமித்ஷா இருவரும் தேர்தல் நடைமுறைகளை மாற்றி ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிடுவர் எனவும் நாட்டு மக்களிடையே இருவரும் மதம், சாதி ரீதியான மோதல்களை தூண்டி விடுகின்றனர் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தான் 70 ஆண்டுகளில் நமக்கு செய்ததை இந்த நான்கரை ஆண்டுகளில் மோடியும், அமித்ஷாவும் மக்களுக்கு செய்துவிட்டனர் எனவும் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஒரு கோடி பேர் வேலை இழந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
பாஜக ஆட்சியில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.