“மக்களின் குரலை பாஜக ஒடுக்குகிறது” - சோனியா காந்தி
மக்களின் குரலை பாஜக அரசு ஒடுக்குவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. அப்போது, மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி.ராஜா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ.பிரையன், திமுகவின் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சோனியாவுடன் சென்றனர். ஜாமியா பல்கலைக்கழக வன்முறை தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, மக்களின் குரலை பாஜக அரசு ஒடுக்குவதாக குற்றம்சாட்டினார். “நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் தற்போது இந்தியா முழுவதும் பரவியுள்ளது. மக்களின் குரல்களை அடக்குவதிலும், சட்டங்களை இயற்றுவதிலும் பாஜக அரசு இரக்கமற்ற முறையில் செயல்பட்டு வருகிறது. இச்செயலை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாங்களும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.” எனத் தெரிவித்தார்.