‘நான் வாழ்வது மதச்சார்பற்ற இந்தியாவில்; உங்கள் விமர்சனங்கள் எடுபடாது !’- பதிலடி கொடுத்த நுஸ்ரத் ஜஹான்

‘நான் வாழ்வது மதச்சார்பற்ற இந்தியாவில்; உங்கள் விமர்சனங்கள் எடுபடாது !’- பதிலடி கொடுத்த நுஸ்ரத் ஜஹான்
‘நான் வாழ்வது மதச்சார்பற்ற இந்தியாவில்; உங்கள் விமர்சனங்கள் எடுபடாது !’- பதிலடி கொடுத்த நுஸ்ரத் ஜஹான்
Published on

குங்குமம், தாலி அணிந்து வந்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதற்காக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட நுஸ்ரத் ஜஹான், தான் வாழ்வது மதச்சார்பற்ற நாட்டில், மதத்தின் பெயரால் நான் யாரையும் பிரித்து பார்ப்பதில்லை; எனவே விமர்சனங்களுக்கு செவிசாய்ப்பதில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பஸிர்ஹட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற பிரபல வங்காள நடிகை நுஸ்ரத் ஜஹான், கடந்த 25ம் தேதி நாடாளுமன்றத்தில் எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார். இவர், பிரபல தொழிலதிபர் நிகில் ஜெயினை கடந்த 19ம் தேதி துருக்கியில் திருமணம் செய்துகொண்டார். 

திருமணம் முடிந்து ஒருவாரத்திற்கு பின்னர் எம்.பியாக பதவியேற்றுக்கொண்டார் நுஸ்ரத். அப்போது தனது தோற்றம் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. நெற்றியில் குங்குமம், தாலி, கை நிறைய வளையல், மருதாணி என முழு புது மணப்பெண் கோலத்தில் காட்சி அளித்திருந்தார். 

உ.பியின் ஜமியா சேக் இயக்கத்தை சேர்ந்த முஃப்தி அசாத் ஆஸ்மி நுஸ்ரத் மீது விமர்சனம் வைத்தார். அவர் கூறுகையில், ‘நுஸ்ரத் ஜஹானின் திருமணத்தை நான் அங்கீகரிக்கவில்லை. நடிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்வார்கள். இஸ்லாமிய விதிப்படி இது தவறு. இஸ்லாமியர்கள், இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களைதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும். தற்போது இஸ்லாம் மதத்தை சாராத ஒருவரை திருமணம் செய்து கொண்டு குங்குமமும், தாலியும் அணிந்து நாடாளுமன்றம் வந்துள்ளார். எனவே, இந்த பிரச்னையை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து நுஸ்ரத் கூறுகையில், ‘எனக்கு எதிராக இதுவரை ஃபாத்வா வழங்கப்பட்டதில்லை. என்னை விமர்சித்தார்கள்; ஆனால் அந்த விமர்சங்களுக்கு நான் செவிசாய்த்ததில்லை. முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தியாவின் குடிமக்கள் நாம். இங்கு எல்லா கலாச்சாரங்களும், சடங்குகளும் மதிக்கப்பட வேண்டும். கடவுளின் பெயரில் நாம் ஏன் பிரிவினையை உண்டாக்க வேண்டும்? நான் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவள்; மதச்சார்பற்ற நாட்டின் குடிமகள். கடவுளின் பெயரில் மக்களிடம் பிரிவினையை உண்டாக்க என்னை என் மதம் கற்பிக்கவில்லை. வங்காள மொழியில் பேசுவதும், திருமணம் ஆனதால் நெற்றியில் குங்குமம் இட்டுக்கொள்வதும் என் விருப்பம். என் மனம் சொல்லும் வழியில் நான் செல்கிறேன். இதில், யார் என்னை மதத்தின் பெயரில் விமர்சித்தாலும் அதை நான் கண்டுகொள்ள மாட்டேன். இது என் வாழ்க்கை; அதை நான்தான் முடிவு செய்ய வேண்டும்’ என பதிலடி கொடுத்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com