மாநிலங்களுக்கு தடுப்பூசி கையிருப்பில் இல்லை என மத்திய அரசு கூறுகையில், தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் எப்படி தடுப்பூசிகள் கிடைக்கின்றன என டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
டெல்லியில் இளைஞர்களுக்கான தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை, மேலும் ஜூன் 10 ஆம் தேதிக்கு முன்னர் தடுப்பூசிகள் கிடைக்கவும் வாய்ப்பில்லை என்று டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா இன்று தெரிவித்தார். 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க டெல்லி மாநில அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது.
தடுப்பூசி விநியோக முறையில் மத்திய அரசு பிடிவாதமாக உட்கார்ந்திருப்பதாக குற்றம் சாட்டிய மனீஷ் சிசோடியா, மத்திய அரசு மாநிலங்களுக்கு போதுமான தடுப்பூசிகள் இல்லையென்று சொல்லும்போது, தனியார் மருத்துவமனைகள் எவ்வாறு தடுப்பூசி மருந்துகளைப் பெறுகின்றன என்று கேள்வி எழுப்பினார்.
”டெல்லியில் 18-44 வயதுக்குட்பட்ட 92 லட்சம் பயனாளிகளுக்கு 5.5 லட்சம் கோவிட் -19 தடுப்பூசிகளை ஜூன் 10இல் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரிவில் 1.84 கோடி டோஸ் எங்களுக்கு தேவைப்படுகிறது, ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு 4.5 லட்சம் டோஸையும், மே மாதத்தில் 3.67 லட்சம் டோஸையும் டெல்லிக்கு வழங்கியுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கான தடுப்பூசிகள் மத்திய அரசிடமிருந்து 47.44 லட்சம் வழங்கப்பட்டது. இவற்றில் 44.76 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது” என மனீஷ் சிசோடியா தெரிவித்தார்.
டெல்லி ஆம் ஆத்மி அரசாங்கம் 10 மில்லியன் டோஸ் கோவிட் தடுப்பூசிகளை அவசரமாக வாங்குவதற்காக உலகளாவிய டெண்டரை வெளியிட்டிருக்கிறது, ஏலதாரர்கள் ஜூன் 7 க்குள் தங்கள் சலுகைகள் அல்லது விருப்பத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 956 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், இது இரண்டு மாதங்களில் மிகக் குறைந்த தினசரி எண்ணிக்கையாகும்.