பரோட்டாவுக்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் #HandsOffPorotta ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது
தென் இந்திய மாநிலங்களில் பரோட்டா தவிர்க்க முடியாத உணவு. கடைகோடி கிராமங்களில் உள்ள ஓட்டல்கள் முதல் மாநகர ஸ்டார் ஓட்டல்கள் வரை பரோட்டா இல்லாத இடம் இல்லை. இந்நிலையில் இந்த பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது தான் தற்போது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அதுவும், ரொட்டிக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பரோட்டாவுக்கு மட்டும் 18% வரி ஏன் என இணையவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த 'ஐடி பிரெஷ் ஃபுட் என்ற நிறுவனம், ஜிஎஸ்டி சம்பந்தமான புகார்களை விசாரணை செய்யும் Authority for Advance Rulings அமைப்பிடம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதில், ரொட்டிக்கு 5% வரி எனும்போது அதே பிரிவு உணவு வகையான பரோட்டாவுக்கு 18% வரி ஏன்? எனக் கேள்வி எழுப்பியது. இது தொடர்பான விசாரணையின் தீர்ப்பில் பரோட்டா உயர்தர உணவு வகைகளில் வருவதாகவும், இது சப்பாத்தி, ரொட்டி வகையில் சேராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரோட்டக்களை 4-5 நாட்கள் வைத்திருந்து பின்னர் சூடு செய்து சாப்பிடலாம் என்பதால் அதற்கு வரி அதிகம் எனவும் தெரிவித்துள்ளது
இதனை அடுத்து பரோட்டா, ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. #HandsOffPorotta என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்யும் பரோட்டா பிரியர்கள், பரோட்டாவுக்கும் தங்களுக்குமான ப்ரியத்தை புகைப்படம் பதிவிட்டும் பகிர்ந்து வருகின்றனர்.