கொரானாவில் பெற்றோர்களை இழந்த கல்லூரி மாணவர்களின் கல்விக்கான செலவுகளை மகாராஸ்டிரா அரசே ஏற்கும் என்னும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் மாநில அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல்.
கொரோனா நோய் தொற்று பரவல் கடந்த 2019ல் தொடங்கியது. இந்த கோவிட்-19 தொற்றுக்கு இதுவரை இந்தியாவில் ஐந்தரை லட்சம் பக்கம் மக்கள் பலியாகியுள்ளனர். இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பலி எண்ணிக்கையில் தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பது மகாராஸ்டிரா மாநிலம் தான்.
மகாராஸ்டிராவில் இதுவரை 80 லட்சம் மக்கள் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு அதில் 1.48 லட்சம் மக்கள் பலியாகி உள்ளனர். இ ந் நிலையில் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மகாராஸ்டிரா அரசு.
மகாராஸ்டிரா மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் மாநில சட்டமன்ற சபையில் பங்கேற்ற போது காங்கிரஸ் எம்எல்ஏ ஷிரிஷ் சவுத்ரியின் கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது ”பல்வேறு அரசு கல்லூரிகளில் 931 இளங்கலை மற்றும் 228 முதுகலை மாணவர்கள் தங்கள் பெற்றோர் இருவரையும் COVID-19க்கு இழந்துள்ளனர். அதனால் அவர்களின் கல்விக்கான முழுசெலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.” என்று தெரிவித்தார்.
மேலும் இதனால், அரசு கருவூலத்துக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடி செலவாகும் என்பதையும் தெரிவித்தார்.