பாதுகாப்பு பிரச்னைகள் இருப்பதால் உண்மையான பெண் ஐயப்ப பக்தர்கள் இப்போது சபரிமலைக்கு வர வேண்டாம் என்று திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் ஏ.பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை அடுத்து சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் உள்ளே நுழைய முடியாமல் திரும்பிவிட்டனர். சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கேரள பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதோடு, கேரள சட்டசபையையும் முடக்கி வருகின்றனர். இதனிடையே சபரிமலை கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால் சிரமங்களை அனுபவிக்க நேர்வதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி சபரிமலை கோவிலின் நடை திறக்கப்பட்டது. கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் பெற்றப்போதிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சபரிமலை கோவிலுக்கு சென்ற பெண்கள் பலர் போராட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பக்தர்கள் போராட்டம் காரணமாக அங்கு அவ்வப்போது பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டின் மண்டல பூஜை இன்று இரவு 10 மணிக்கு நடைபெறவுள்ளது. மண்டல பூஜைக்கு பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. அதனைதொடர்ந்து ஜனவரி 14ஆம் தேதி நடைபெறும் மகரவிளக்கு பூஜைக்காக வரும் டிசம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படவுள்ளது. இதனால் பக்தர்கள் வசதிக்காகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இடுக்கி மற்றும் பத்தனம்திட்ட மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 10 வயதிற்கும் 50 வயதிற்கும் இடப்பட்ட வயது பெண்கள் இன்னும் தரிசனம் செய்யவில்லை. மேலும் இந்த மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் முடிந்ததும் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு சீராய்வு மனுக்களை, வரும் ஜனவரி 22ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது. இந்நிலையில் திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் ஏ.பத்மகுமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது " மண்டலப்பூஜை நிறைவு பெறுகிறது. பின்பு 30 ஆம் தேதி நடை திறக்கப்பட்டால் மகரவிளக்கு பூஜைக்காக, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதுபோன்ற நேரத்தில் இளம் பெண்களின் பாதுகாப்பில் சிரமம் ஏற்படும்" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர் "எனவே பாதுகாப்பு காரணங்களை கருதி இப்போது உண்மையான ஐயப்ப பெண் பக்தர்கள் யாரும் வரவேண்டும். இதனை தேவஸம் போர்டு சார்பாக கேட்டுக்கொள்கிறேன். பெண்களை அனுமதிப்பு அவர்களின் பாதுகாப்பு குறித்து மகர விளக்கு பூஜை முடிந்த பின்பு ஆலோசிக்கப்படும். இது தொடர்பாக அரசு மற்றும் நீதிமன்றம் மூலமாக நல்ல முடிவு கிடைக்கும்" என தெரிவித்துள்ளார்.