பாலியல் வன்கொடுமை குறித்து கருத்து பதிவிட்ட எர்ணாகுளம் எம்பியின் மனைவிக்கு சமூகவலைத்தளங்களில் எதிர்ப்பு வலுத்துள்ளது.
எர்ணாகுளம் எம்பி ஹிபி ஈடனின் மனைவி அன்னா லிண்டா ஈடன். இவர் அண்மையில் தனது முகநூல் பக்கத்தில், விதி என்பது பாலியல் வன்கொடுமை போன்றது, அதை எதிர்த்து தப்பிக்க முடியாவிட்டால், அதை அனுபவிக்க முயற்சி செய்ய வேண்டியதுதான் என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அன்னா லிண்டாவின் சர்ச்சைக் கருத்தை அகற்ற வேண்டும் என்றும் இதுகுறித்து விளக்கத்தை தர வேண்டும் எனவும் பலர் குரல் எழுப்பினர். எம்.பி.யின் மனைவி கூறிய கருத்தை விமர்சிக்க 'SayNoTo-RapeJokes' மற்றும் #EndRapeJokeFilth போன்ற ஹேஷ்டேக்குகள் பயன்படுத்தப்பட்டன. இதையடுத்து தனது சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய அன்னா லிண்டா, விளக்கமும் அளித்துள்ளார். தனது பள்ளி நாட்களில் ஒரு நடிகரின் கருத்தையே பதிவிட்டதாகவும், பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதில் மிகவும் வருத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.