‘பாலியல் வன்கொடுமை நடந்தபின் வா’ புகாரளிக்க வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீசார்

‘பாலியல் வன்கொடுமை நடந்தபின் வா’ புகாரளிக்க வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீசார்
‘பாலியல் வன்கொடுமை நடந்தபின் வா’ புகாரளிக்க வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீசார்
Published on

உன்னாவ் பகுதியில், பாலியல் வன்கொடுமை முயற்சி தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணை அலட்சியமாக பேசி போலீசார் திருப்பி அனுப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை,‌‌ பாலியல் வன்கொடுமை‌ செய்தவர்கள் ஜாமீனில்‌‌‌ வெளியே வந்த பின்னர் பெட்ரோல் ‌ஊற்றி தீ வைத்தனர்‌. டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், உயிரிழந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அதே உன்னாவ் மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை கும்பல் ஒன்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளது. அந்த கும்பலிடமிருந்து தப்பிய பெண், காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த காவல் நிலையத்தில் இருந்தவர்கள் "பாலியல் வன்கொடுமை செய்த பின்பு புகார் கொடு நடவடிக்கை எடுக்குறோம்" என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. காவலர்களின் இந்த பதிலை கேட்ட பாதிப்புக்கு உள்ளான பெண், தனக்கு நேர்ந்த அவலம் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் "நான் மருந்து வாங்க சென்றுக்கொண்டு இருந்தேன். அப்போது மூன்று பேர் என்னை தடுத்து நிறுத்தினர். பின்பு என்னுடைய ஆடைகளை பிடித்து இழுத்து, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தனர். பின்பு, நான் அந்த இடத்தில் இருந்து தப்பிவிட்டேன். உடனடியாக காவல் நிலையம் சென்ற நான், இது குறித்து புகார் அளித்தேன். ஆனால் அதற்கு அவர்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பின்பு வா, என அலட்சியமாக கூறினார்கள். இந்தச் சம்பவம் நடந்த பின்பு மூன்று மாதங்களாக காவல் நிலையம் சென்று வருகிறேன். ஆனால் இன்னுமும் என் புகார் ஏற்கப்படவில்லை" என வருத்தத்துடன் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்த அந்தப் பெண், "என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர்கள் தினமும் என் வீட்டுக்கு வந்து மிரட்டுகிறார்கள். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவோம் என கூறுகிறார்கள்" என பயத்துடன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com